கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறியும் தமிழ் அரசு
அரசியலமைப்பு பேரவையில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை விலகிக் கொள்ளுமாறு, தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டு, மூன்று வாரங்கள் ஆகிவிட்டன.
இந்த தீர்மானத்தை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
ஏன் சிறிதரன் அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என, கட்சியின் அரசியல் குழு தீர்மானித்தது என்பதற்கான விரிவான விளக்கத்தையும் அவர் கொடுத்திருந்தார்.
அரசியலமைப்பு பேரவையில், எட்டு தடவைகள் அரசாங்கத்தின் முன்மொழிவுகளுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார் என்பது சிறிதரன் மீதான முதல் குற்றச்சாட்டு.
இராணுவ பின்னணி கொண்டவர்களை ஆதரித்ததன் மூலம் இராணுவமயமாக்கலுக்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்பது, இன்னொரு பிரதான குற்றச்சாட்டு.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே சிறிதரனை அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகும் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதென, தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஜனவரி 4-ஆம் திகதி நடந்த அந்தக் கூட்டத்திற்கு பிறகு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் என்ற வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு தாம் கடிதம் மூலம் அறிவித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
கட்சிக்கும் தங்களுக்கும் சங்கடங்களை ஏற்படுத்தாமல் பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறும், பதவி விலகியமை குறித்து ஒரு வாரகாலத்துக்குள் கட்சிக்குத் தெரியப்படுத்துமாறும் தாம் கடிதம் எழுதியிருப்பதாக சுமந்திரனே ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.
அரசியல் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டு மூன்று வாரங்களாகியும், சிறிதரன் பதவியில் இருந்து விலகியதாக தகவல் இல்லை.
அவர் விலகுவார் என்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. அப்படியானால், தமிழ் அரசுக் கட்சி என்ன செய்யப் போகிறது? அவருக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப் போகிறதா?
சிறிதரன் கட்சியின் இந்த முடிவுக்கு கட்டுப்படாவிட்டால், கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்ற ஊகங்களும் கருத்துக்களும் வெளிவந்திருந்தன.
இந்த சூழலில், கடந்த 2026 ஜனவரி 18 ஆம் திகதி தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி. வி .கே. சிவஞானம் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
அந்த சந்திப்பின் அடிப்படைக் காரணம், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சியை சீண்டும் வகையில் அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்திய கருத்துக்கள் தான்.
போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தை- சந்திரசேகர் அரசியல் மேடை ஆக்கியிருந்தார்.
தமிழ் அரசுக் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களை பற்றி பேசினார். அவை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது.
போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சார கூட்டத்தில், இன்னொரு அரசியல் கட்சியைப் பற்றி விமர்சிப்பது அபத்தமானது.
அந்த அரசியல் தெளிவுகூட அமைச்சர் சந்திரசேகரிடம் இருக்கவில்லை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்களிடம், இவ்வாறான அரசியல் தெளிவு படிப்படியாக குறைந்து வருகிறது.
சந்திரசேகருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே தமிழ் அரசுக் கட்சி பதில் தலைவரின் ஊடக சந்திப்பு அமைந்திருந்தது.
அதில் அவர், சிறிதரன் தொடர்பாக, அரசியல் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாகவும் சிறிதரன் மற்றும் சுமந்திரனுக்கு இடையிலான உறவு தொடர்பாகவும் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
கட்சியை பிளவுபடுத்த முயற்சிகள் நடப்பதாகவும், அந்த கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் சூளுரைத்தார். அதற்கு தான் இடம் அளிக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் உறுதியான கருத்தை இந்த சந்தர்ப்பத்தில் வெளியிட்டிருப்பது ஆச்சரியம்.
தன்னால் கட்சியை பிளவுபடாமல் வழிநடத்த முடியும் அதற்கான தகுதியும் திறமையும் தன்னிடம் உள்ளது என்பதை அவர் ஆவேசமாக கூறியிருந்தார்.
சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் சுமந்திரனின் கைப்பாவையாக இயங்குகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள், அவருக்கு எதிரானவர்களால் முன்வைக்கப்பட்டு வந்த சூழலில், கட்சி தலைமைக்கு தான் பொருத்தமானவர் தான் என்று, நிறுவ அவர் முயற்சிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
கட்சி பிளவுபடாது என்கிறார், சிறிதரனை கட்சியை விட்டு நீக்கப் போவதாக யார் கூறியது என்று கேட்கிறார், அவர்களுக்கு இடையில் எந்த முரண்பாடும் இல்லை, அந்நியோன்யமாக இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
ஜனநாயகத்தில் முரண்பாடுகள் இருப்பது வழமை, அது பெரிய விடயம் அல்ல என்று என்ற கருத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
அவை எல்லாவற்றிற்கும் அப்பால், இது உள்வீட்டு விவகாரம் இதற்குள் வேறு யாரும் தலையிட தேவையில்லை என்றும் சி.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டிருந்தார்.
இது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் தான். எப்போது என்றால், கட்சியின் உள்விவகாரம் உள்விவகாரமாக இருக்கும் வரை தான் அது சரியானது.
கட்சியின் தலைமைத்துவத் தெரிவு தொடர்பான விடயங்கள், நீதிமன்றம் செல்லாத வரை அது உள்வீட்டு விவகாரம் தான்.
அரசியலமைப்பு பேரவையில் சிறிதரனின் நடத்தை தொடர்பான, உள்வீட்டு விவகாரத்தை வெளியே கொண்டு வந்தது, வேறு யாரும் அல்ல- அந்தக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான சுமந்திரன் தான் .
அரசியல் குழு கூட்டத்தின் முடிவில் அவரே சிறிதரனுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக, விலாவாரியான விளக்கத்தை கொடுத்திருந்தார்.
அதற்குப் பின்னர், அரசியல் குழுவின் தீர்மானம் தொடர்பாக அவருக்கு கடிதம் எழுதப்பட்ட தகவலையும் அவரே ஊடகங்களிடம் பகிரங்கப்படுத்தி இருந்தார்.
ஆக, இது ஒன்றும் இட்டுக்கட்டப்பட்டபுனை கதை அல்ல. புலனாய்வுத் தகவலும் அல்ல.
இதனை கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் என்ற நிலையில் இருக்கின்ற சுமந்திரனே கூறியிருந்தார். இதனை அவரோ அல்லது சி.வி.கே.சிவஞானமோ மறுக்க முடியாது .
இந்த விவகாரத்தை தமிழ் அரசுக் கட்சி உள் வீட்டுக்குள் தீர்த்திருக்க வேண்டும். அதனை வெளியே கொண்டு வந்தது தவறு என்றுதான் பலரும் சுட்டிக்காட்டி இருந்தனர்.
அப்படியிருக்க இந்த பிரச்சினையை ஊடகங்களிடம் பகிரங்கமாக கொண்டு சென்று சேர்த்து விட்டு, இப்போது இது உள்வீட்டுப் பிரச்சினை, இதில் யாரும் தலையிட தேவையில்லை என்று கூறுவது அர்த்தமற்றது .
உள் வீட்டுக்குள் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகளை வெளியரங்குக்கு கொண்டு வருவதும் வெளியரங்கில் பேச வேண்டிய பிரச்சினைகளை உள்ளுக்குள் தீர்த்துக் கொள்ள முனைவதும் தான் தமிழ் அரசுக் கட்சியின் பலவீனம்.
அரசியல் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கட்சி தலைமைக்கு விளக்கம் அளித்திருப்பதாகவும், அதனை தாங்கள் பரிசீலித்து வருவதாகவும் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டிருக்கிறார் .
சிறிதரன் மீதான குற்றச்சாட்டுகளாகட்டும் அவர் மீதான நடவடிக்கைகள் ஆகட்டும், கட்சி தமக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதனை வெளிப்படுத்தி இருக்க தேவையில்லை.
அவர் மீதான வன்மம் தான் அது பற்றிய தகவல்களை வெளியே கசிய விடுவதற்கு காரணம்.
ஊடகங்களிடம் பகிரங்கப்படுத்தி – அவரை அரசுக்கு சார்பானவராக- கட்சிக்கு துரோகம் செய்பவராக- தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படுபவராக- இவற்றிற்கு எல்லாம் அப்பால், இராணுவ மயமாக்கலை ஆதரிக்கின்ற ஒருவராக அடையாளப்படுத்துவதற்கு தமிழ் அரசுக் கட்சி முற்பட்டதன் விளைவு இது.
இந்த விவகாரத்தில் தமிழ் அரசுக் கட்சி வேகமாக செயற்பட முனைந்ததே தவிர, விவேகமாக செயற்பட முனைந்ததென கூறமுடியாது .
சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்த விவகாரம் தோற்றம் பெற்றது.
அரசியலமைப்பு பேரவையில் சிறிதரனின் எடுத்த நிலைப்பாடுகள் சரியானவை என்று ஒருபோதும் கூற முடியாது.
அதற்கு எதிராக கட்சி உரிய வகையில் செயற்பட்டிருக்க வேண்டுமே தவிர, அதனை வெளிப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.
அதைவிட இப்பொழுது சிறிதரன் பதவி விலகாமல் போனால், கட்சியின் தீர்மானம் என்னவானது என்ற கேள்வி வரும் .
தமிழ் அரசுக் கட்சியை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்துகின்ற பிரதான கட்சியாக இருக்கிறது.
அந்த வகையில் அது தனது பொறுப்பையும் செயற்பாடுகளையும் நிதானமாக கையாள வேண்டிய நிலையில் இருப்பதை மறுக்க முடியாது.
வடக்கில் காலூன்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளும் முயற்சியின் விளைவாகவே, ஒரு அரசாங்க நிகழ்வு அரசியல் நிகழ்வாக மாற்றப்பட்டது.
அங்கு பிரதான எதிரியாகப்பட்டது போதை அல்ல. தமிழ் அரசுக் கட்சி தான். தமிழ் அரசுக் கட்சியை இலக்கு வைத்து அந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் தமிழ் அரசுக் கட்சி உள்ளக முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, அரசாங்கத்துடன் -ஆளும்கட்சியுடன் நின்று நிதானமாக வலுவாக மோதுவதற்குத் தயாராக வேண்டும்.
அதைவிடுத்து, கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்தால் விளைவு விபரீதமாகத் தான் அமையும்.
வழிமூலம்- கபில்
வீரகேசரி வாரவெளியீடு (25.01.2026)
