மற்றொரு இஸ்லாமிய அமைப்பும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்ப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதக் குழுவொன்றை, சிறிலங்கா அரசாங்கம் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவினால் கடந்த 6ஆம் திகதியிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு அரசிதழில், தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஏற்கனவே இருந்த அமைப்புகளுடன், சூப்பர் முஸ்லிம் எனப்படும் சஹாபி தாரிகா என்ற அமைப்பு, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு, 2019 முதல் சிறிலங்காவில் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனைகுடி என்ற முகவரியுடன், இந்த அமைப்பு டெலிகிராம் சனல் மூலம் செயற்பட்டு வருவதாக அரசிதழ் அறிவிப்பில் குறி்ப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத நிதியுதவியில் ஈடுபடுவதற்காக, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள், முஸ்லிம் அமைப்புகள் மீதான தடையையும் திருத்தப்பட்ட பட்டியல் உள்ளடக்கியுள்ளது.
இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாத் தவிர, தமிழர் புனர்வாழ்வுக் கழகம், உலகத் தமிழர் இயக்கம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஜமாத் மில்லாத் இப்ராஹிம் , வில்லாயத் அஸ் செய்லானி மற்றும் சிறிலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் உள்ளிட்ட 16 அமைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
