வெனிசுவேலா மீதான நடவடிக்கையை கண்டித்து கொழும்பில் போராட்டம்
வெனிசுவேலா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை மற்றும் அதிபர் நிக்கலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து கொழும்பில் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக நேற்று வெனிசுவேலாவைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதில் வெனிசுவேலாவை விட்டு விடு, போர் வேண்டாம் என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பலர் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
அதேவேளை நேற்று முன்தினம் மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டில் அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக, கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்தப் போராட்டத்திலும் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
வெனிசுவேலா மீதான அமெரிக்க நடவடிக்கையை கண்டித்து போராட்டங்கள் இடம்பெறுவதால் கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.



