யாழ்ப்பாணத்தில் ரஷ்ய தூதுவர்- வடக்கு ஆளுநருடன் பேச்சு
சிறிலங்காவுக்காக ரஷ்ய தூதுவர் லிவன் டிசகாயன் (Levan Dzhagaryan) யாழ்ப்பாணத்துக்கு நேற்று அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருப்பதாக, வடமாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது, வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனை சந்தித்த ரஷ்ய தூதுவர், பிராந்திய மட்டத்தில் ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் குறித்து கலந்துரையாடியதாக ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கலாசார மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மாகாணத்திற்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது, கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசார உறவுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, வடக்கு மாகாணத்தில் ரஷ்ய மொழிப் படிப்புகளைத் திறப்பதற்கான முயற்சிகள் உட்பட மனிதாபிமான ஒத்துழைப்பு குறித்தும் இந்தச் சந்திப்பின் போது ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டதாக, ரஷ்ய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதிலும், ஆக்கபூர்வமான உரையாடலைப் பேணுவதிலும் இருதரப்பினரும் பரஸ்பர ஆர்வத்தை வெளிப்படுத்தினர் என்றும் ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை ரஷ்ய தூதுவர் யாழ்ப்பாணத்தில் வேறு எங்கெங்கு சென்றார், யார் யாரை சந்தித்தார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

