பேரிடரைக் காரணம் காட்டி பிற்போடப்படும் மாகாண சபைத் தேர்தல்கள்
சிறிலங்காவில் மாகாண சபை தேர்தல்கள் மேலும் பிற்போடப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் கூறுகின்றன.
பேரிடரின் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்ளூராட்சி , மாகாண சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தாமதம் ஏற்படக் கூடுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் நிலவும் சட்டப் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டியுள்ளது.
அதனுடன் தொடர்புடைய திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அமைச்சர் சந்தன அபேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
