இரண்டு மாதங்களில் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான தர நடைமுறைகள்
சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாள்வதற்கான தர நடைமுறைகள், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சீன ஆய்வுக் கப்பல்கள் சிறிலங்கா கடற்பரப்பிற்கு வருவதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தியதை அடுத்து, வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாள்வதற்கான தர நடைமுறைகளை வரைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடந்த ஆண்டு ஒரு குழுவை நியமித்திருந்தது.
எனினும், சிறிலங்கா அரசாங்கம் இன்னும் இந்த தர நடைமுறைகளை இறுதி செய்யவில்லை.
இந்த நிலையில், அந்தக் குழு இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகவும், இரண்டு மாதங்களுக்குள், அதற்கான பணியை முடிப்போம் என்றும், ஊடகச் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்திய, அமெரிக்க அழுத்தங்களை அடுத்து, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு விதித்த ஓராண்டு தடை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது.
அதன் பின்னர், கடந்த ஓராண்டாக இந்த தர நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.
