மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் முறை குறித்து தீர்மானிப்பதற்கான தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்மொழிவதற்கு, அரசாங்கம் நாடாளுமன்ற விவகாரக் குழுவின் அனுமதியைப் பெற்றுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய, நாடாளுமன்ற விவகாரக் குழு ஜனவரி 6 ஆம் திகதி, இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கும் தீர்மானித்தை அங்கீகரித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதற்கான தேர்தல் முறை குறித்து தெரிவுக்குழு ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.
மேலும் அது தொடர்பான அதன் முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான சட்ட சூழ்நிலைகளை மீளாய்வு செய்வதற்கும் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
