ஜெனிவா தீர்மானத்துக்கு மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவிற்கு 22 நாடுகள் இணை அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளன.
சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின், ஆணையை நீடிக்கும் வகையிலான பிரேரணையை பிரித்தானியா, கனடா, மலாவி, வட அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய அனுசரணை நாடுகள் முன்வைத்துள்ளன.
செப்ரெம்பர் 1ஆம் திகதி முன்வைக்கப்பட்ட முதற்கட்ட வரைவு, 23ஆம் திகதி திருத்தப்பட்டு, மீண்டும் 29ஆம் திகதி திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட தீர்மான வரைவுக்கு, இணை அனுசரணை வழங்க 22 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.
தற்போது, அனுசரணை நாடுகள் மற்றும் இணை அனுசரணை நாடுகள் என, தீர்மான வரவை ஆதரிக்கும் 27 நாடுகளில், 10 நாடுகள் தற்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்களாக உள்ளன.
இந்தத் தீர்மானம் ஒக்டோபர் 8 ஆம் திகதி சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீர்மானத்தின் ஊடாக, சிறிலங்கா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும்.
இருப்பினும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் குறித்த அடுத்த விரிவான அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2027 செப்டம்பரிலேயே சமர்ப்பிக்கப்படும்.
அதேவேளை, 51/1 தீர்மானத்தின் ஊடாக, உருவாக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்தின் (OSLap) காலமும் இந்தத் தீர்மானத்தின் மூலம் நீடிக்கப்படும்.