ரவி செனிவிரத்னவை விசாரணைக்கு அழைக்கிறது நாடாளுமன்ற குழு
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவை உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு அழைக்கவுள்ளது.
ரவி செனிவிரத்னவுக்கு எதிராக உள்ள வழக்குகளின் நிலை குறித்து விசாரிக்க அவரை குழுவின் முன் அழைப்பதற்கு கடந்தவாரம் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கான தூதுவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், சபைகளின் தலைவர்கள் போன்ற உயர்பதவிகளுக்கான அரசாங்க நியமனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்த நாடாளுமன்றக் குழுவின் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ரவி செனிவிரத்ன மதுபோதையில் வாகனம் ஓட்டியமை உள்ளிட்ட பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
இந்த வழக்குகளின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காகவே அவரை விசாரணைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.