குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்படவுள்ள மகிந்தவின் விஜேராம இல்லம்
தற்போது சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வசித்து வரும், கொழும்பு, விஜேராம வீதியில், உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம், ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மூத்த அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், அதிகாரபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வசதிகளும், திரும்பப் பெறப்படும். ஓய்வூதிய உரிமைகள் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும்.
இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா என்பது குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் விஜேராம மாவத்தையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதாக மகிந்த ராஜபக்ச முன்னர் கூறியிருந்தார்.