நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு – செய்தித்துளிகள்
சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சிகளின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, எதிர்க்கட்சி பிரதம கொரடா கயந்த கருணாதிலக ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
அடுத்த வாரம் நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது குறித்து தீர்மானிக்கப்படும்.
ராஜித சேனாரத்னவைக் கைது செய்ய உத்தரவு
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடத்திய விசாரணையில் ராஜித சேனாரத்ன சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
அவர், வாக்குமூலம் பதிவு செய்வதைத் தவிர்த்து வருவதாகவும், அதன் மூலம் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் சமர்ப்பணங்களைச் செய்தது.
இதனைப் பரிசீலித்த பின்னர் கொழும்பு நீதிவான் பசன் அமரசேகர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிக்க அங்கீகாரம்.
சிறிலங்கா காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடிய அரசியலமைப்பு பேரவை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்ட பிரியந்த வீரசூரியவின் பெயரை பரிசீலித்து இந்த முடிவை அறிவித்துள்ளது.
இதையடுத்து அவர் 37 ஆவது காவல்துறை மா அதிபராக பொறுப்பேற்பார்.
பிரியந்த வீரசூரிய, கடந்த நொவம்பர் மாதம் தொடக்கம் பதில் காவல்துறை மா அதிபராக பணியாற்றி வருகிறார்.
அரச சேவைக்கு 62 ஆயிரம் பேரை ஆட்சேர்க்க அமைச்சரவை அனுமதி
அரசசேவையில் உள்ள அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக, 62ஆயிரம் பேரை, அவசரமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசதுறையில் நிரப்ப வேண்டிய 62 பதவிகளை அடையாளம் கண்டுள்ளோம், அவற்றை விரைவில் நிரப்புமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
இது மட்டுமே வேலையின்மையை தீர்க்காது என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.