அமெரிக்க எரிபொருள் கொள்வனவு – 1ஆம் திகதிக்குள் தீர்மானிக்க முடியாது
அமெரிக்காவிடம் எரிபொருளைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, ஓகஸ்ட் 1ஆம் திகதிக்குள் சிறிலங்காவினால் தீர்மானம் எடுக்க முடியாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 30 வீத வரிகளை அறிவித்துள்ள நிலையில், அதனைக் குறைக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைத்தால் மட்டுமே அது சாத்தியம் என அமெரிக்கா கூறியுள்ளது.
இதனால் அமெரிக்காவில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியங்கள் குறித்து சிறிலங்கா ஆராய்ந்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக அமெரிக்காவின் எரிபொருள் சிறிலங்காவுக்கு பொருத்தமானதா என்று ஆய்வு செய்வதற்காக அதன் மாதிரிகள் கோரப்பட்டிருந்தன.
அதற்கமைய அமெரிக்க அதிகாரிகளால் எரிபொருள் மாதிரிகள், கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது கிடைக்க இரண்டு வாரங்களாகும் என்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்பின் வரிகள் வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள நிலையில்,அதற்கு முன்னர் எரிபொருள் கொள்வனவு குறித்து சிறிலங்கா முடிவெடுப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.