அமெரிக்க வரியை 20வீதமாக குறைக்க சிறிலங்கா முயற்சி
அமெரிக்கா அறிவித்துள்ள 30 வீத வரியை 20 சதவீதமாகக் குறைக்க சிறிலங்கா அரசாங்கம் கடுமையாக முயற்சித்து வருவதாக வர்த்தக பேச்சுக்கள் தொடர்பான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னர் அறிவித்த 44 வீத வரி, 30 வீதமாக குறைக்கப்பட்டதை சிறிலங்கா அரசாங்கம் ஒரு சாதனையாகக் கருதினாலும், அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மற்ற நாடுகளுடன் போட்டியிட மேலும் வரிக் குறைப்பு தேவை என்று நம்புகிறது.
அமெரிக்கா ஓகஸ்ட் 1 ஆம் திகதி வரை நாடுளுடன் பேச்சு நடத்த நேரம் ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து ஆராய சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கடந்த சனிக்கிழமை அனைத்து பங்குதாரர்களுடனும் ஒரு கூட்டத்தை நடத்தியிருந்தார்.
அந்தக் கூட்டத்தில், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதற்கு புதிய விதிமுறைகளைத் தேடுவதற்காக, நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் எந்த விடயத்திலும் சமரசம் செய்வதற்கான சாத்தியங்களை அவர் நிராகரித்தார்.
இருப்பினும், அரசாங்கம் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த வொஷிங்டன் டிசிக்கு ஒரு குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
“தற்போதைய வரி வீதத்தை குறைந்தபட்சம் 20 சதவீதமாகக் குறைக்க விரும்புகிறோம்.
இல்லையெனில், நாங்கள் போட்டி போடுவது கடினமாக இருக்கும்.
அதே நேரத்தில், அமெரிக்காவுடனான வர்த்தக இடைவெளியைக் குறைக்க நாம் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேட வேண்டும்.
அமெரிக்காவிலிருந்து அதிக இறக்குமதிகளை அனுமதித்தால், இங்குள்ள நுகர்வோருக்கு ஏற்படும் செலவுகளின் தாக்கத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும்,” என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளன.