ஈஸ்டர் தாக்குதல் உண்மையை வெளிக்கொண்டு வருவது சவாலானது
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக் கொண்டு வருவது, ஒரு சவாலான பணி என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கர்தினால் மல்கம் ரஞ்சித்தின், குருத்துவ வாழ்வின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே சிறிலங்கா அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறிய அரசாங்கம் விசாரணையை நடத்த வேண்டும். இது ஒரு பாரிய வேலை.
இருப்பினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு கர்தினால் ரஞ்சித் அடிக்கடி விடுக்கும் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்கும்.
கர்தினால் சில நேரங்களில் அமைதியான கோரிக்கையை விடுக்கிறார், அதே நேரத்தில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி பேசும்போது, சில நேரங்களில் தலையிடுபவராக மாறுகிறார்.
இருப்பினும், நாங்கள் அவருக்கு செவிசாய்ப்போம் என்றும் சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் பேசிய கர்தினால் ரஞ்சித், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தி, அவற்றின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை வெளிக்கொணருமாறு சிறிலங்கா அதிபரிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியம்,போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரசங்கங்களைக் கேட்காதீர்கள், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு கஷ்டங்களைப் போக்குவதற்கும் பாடுபடுங்கள்” என்றும் அவரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.