மேலும்

12 ஆண்டுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2,794 பேர் கைது

2009ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கும், 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில்  2,794 பேர், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவிடம் (CTID)   தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமையவே, இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தடுப்பு உத்தரவுகளின் கீழ் 2,474 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டனர்.

அத்தகைய உத்தரவுகளுக்கான கோரிக்கைகள் எதுவும் நிராகரிக்கப்படவில்லை.

அதிக எண்ணிக்கையில் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதும்,  184 சந்தேக நபர்களுக்கு எதிராக மட்டுமே முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்களில், 44 பேர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 31 பேர் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் 10 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு தடுப்பு மையங்கள் தொடர்பான விபரங்களும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ள புதிய செயலகக் கட்டடத்தின் ஆறாவது தளம், பூசா தடுப்பு மையம், தங்காலையிலுள்ள பழைய சிறைச்சாலை வளாகம், வவுனியாவில் உள்ள காவல் பணியக வளாகம் மற்றும் பிற இடங்கள் இதில் அடங்கும்.

இந்த தரவுகளின்படி, 12 ஆண்டுகளில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 2,500 பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும், 7 சதவீதத்திற்கும் குறைவானவர்களே முறையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்.

இந்த குறிப்பிடத்தக்க இடைவெளி, குற்றச்சாட்டு இல்லாமல் தனிநபர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுவது குறித்த கவலைகளைத் தூண்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *