அரசின் இலக்குகளை எட்ட அதிகாரமட்டம் ஒத்துழைக்கவில்லை
அரசாங்கத்தின் இலக்குகளை விரைவாக அடைவதற்கு, அதிகாரமட்டம் (bureaucracy ) ஒத்துழைக்கவில்லை என்று, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஒப்புக்கொண்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுர குமார திசாநாயக்கவினால், அவர் விரும்பும் வேகத்தில் நகர முடியவில்லை. எனது அமைச்சிலும் அதுவே நிலை.
விடயங்களைச் செய்து முடிக்க நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
பெரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில், விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றினால் நிறைய சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.
சிக்கல்கள் ஏற்பட்டால் நியமித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது.
எனது அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தின் தலைவர் நீக்கப்பட்டுள்ளார். மற்றொருவருக்கு எதிராக விசாரணை நடக்கிறது.
எங்களுக்கு மூன்று அம்சங்களில் மாற்றங்கள் தேவை.
நாங்கள் பாரம்பரிய அரசியல் பாதையில் நடக்கவில்லை. அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்.
எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் வடிவமைக்கிறோம்.
இரண்டாவதாக, நாம் பொருளாதாரப் பாதையை மாற்ற வேண்டும்.
கடன்கள் மற்றும் தனியார்மயமாக்கலைச் சார்ந்திருக்கும் பொருளாதாரப் பாதையை நாம் நாட முடியாது.
அதற்கு பதிலாக, விவசாயம், தொழில்துறை, மீன்பிடித் துறை போன்றவற்றைக் கட்டியெழுப்ப விரும்புகிறோம். நாங்கள் இப்போது அதைத் தொடங்கியுள்ளோம்.
மூன்றாவதாக, இனவெறி மற்றும் மத பாகுபாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு, போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழித்து சமூகத்தை மாற்ற விரும்புகிறோம்.” என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.