கைது பயத்தில் விசாரணைக்கு வராமல் பதுங்கினார் ராஜித சேனாரத்ன
இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நேற்று விசாரணைக்கு சமூகமளிக்காமல் நழுவியுள்ளார்.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்திற்கு, தென்கொரிய நிறுவனம் ஒன்றுக்கு உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அனுமதியளித்தமை தொடர்பாக, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகிறது.
இதுதொடர்பான விசாரணைக்கு அவர் நேற்றுக்காலை 9 மணியளவில் அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவரது சட்டத்தரணி நேற்று ஆணைக்குழு முன்பாக முன்னிலையாகி, சுகவீனம் அடைந்திருப்பதால் ராஜித சேனாரத்னவினால் விசாரணைக்கு வர முடியவில்லை என்று கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதேவேளை, இந்த வழக்கு தொடர்பாக ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அனுமதி கோரி, இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு , கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்கவிடம் சான்றுகளை சமர்ப்பித்துள்ளது.