வலுவான நிலையில் சிறிலங்கா- அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு
சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது என்று, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்திருந்த, அமெரிக்காவின் 249ஆவது சுதந்திர தினத்தை ஒட்டிய நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் ஒன்றாக இணைந்து, உலகளாவிய பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளோம். கல்வி உறவுகளை விரிவுபடுத்தியுள்ளோம்.
பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். பிராந்திய உறுதித்தன்மையை ஊக்குவித்துள்ளோம்.
மேலும் உலகளாவிய வர்த்தகத்திற்கு இன்றியமையாத பாதுகாப்பான, வெளிப்படையான கடல் பாதைகளை உருவாக்க ஆதரவு வழங்கியுள்ளோம்.
கடந்த ஆண்டு அமெரிக்காவின், இந்தோ-பசுபிக் கட்டளை (INDOPACOM) தளபதி அட்மிரல் சாம் பப்பாரோவின் சிறிலங்கா வருகை மற்றும் பீச் கிராப்ட் கிங் ஏர் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை பரிசளித்தமை என்பன முக்கியமான நடவடிக்கைகளாகும்.
வளர்ந்து வரும் கடல்சார் ஒத்துழைப்பையும், மிகவும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் இது காட்டுகிறது.
சிறிலங்காவுடனான எங்கள் பாதுகாப்பு கூட்டாண்மை முன்னெப்போதையும் விட வலுவானதாக உள்ளது என்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, பாதுகாப்பு கூட்டாண்மைகள் மற்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்கும் இந்தோ-பசுபிக் கட்டளை பணியகத்தின் ஒத்துழைப்பை வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.