சர்ச்சையை கிளப்பிய ஆசியா குறித்த சிறிலங்கா அமைச்சரின் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் அறிவிக்கப்பட்ட, பரஸ்பர வரிகள் தொடர்பாக, அமெரிக்காவுடன் பேச்சுகளை நடத்தியிருக்கும் ஒரே ஆசிய நாடு சிறிலங்கா தான் என பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வரிகள் தொடர்பாக இரண்டு முறை பேச்சுக்களுக்குச் சென்ற சிறிலங்கா அரசாங்க குழுவினர் இன்னமும்எந்த தீர்வையும் பெற்றுக் கொள்ளாதமை குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 44% வரி தொடர்பாக – அமெரிக்காவுடன் சாதகமான உடன்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பைத் தொடர்ந்து, சிறிலங்காவின் உயர்மட்டக் குழு கடந்த மாதம் வொஷிங்டன், டி.சி.க்கு பேச்சுவார்த்தைகளுக்காக பயணம் செய்திருந்தது.
அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகள் தற்போது 90 நாள்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவுடனான இணக்கப்பாடு குறித்த கூட்டு அறிக்கை வெளியிடப்படும்.
பல முக்கிய உள்ளூர் தொழில்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் வரிச் சுமையைக் குறைக்க அரசாங்கம் அதன் அதிகாரத்திற்குள் அனைத்தையும் செய்ய உறுதிபூண்டுள்ளது என்றும் பேராசிரியர் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளுடன் அமெரிக்கா வரிகள் தொடர்பாக ஏற்கனவே பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுடன் பேச்சு நடத்திய ஒரே ஆசிய நாடு சிறிலங்கா தான் என பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டிருப்பது, சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவும், இந்தியாவும் இல்லாத ஆசியா எங்குள்ளது என கேலியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.