மாலைதீவு செல்லும் சிறிலங்கா அதிபர்- 6வது வெளிநாட்டுப் பயணம்
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாத இறுதியில் மாலைதீவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இருதரப்பு வர்த்தகம் மற்றும் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அவர் இந்த மூன்று நாள்கள் பயணத்தை மேற்கொள்வார் என இதனுடன் தொடர்புடைய வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் கூறுகின்றன.
சிறிலங்கா அதிபராக கடந்த செப்ரெம்பர் மாதம் பொறுப்பேற்ற அனுரகுமார திசாநாயக்க வெளிநாட்டுக்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணமாக இது இருக்கும்.
ஏற்கனவே அவர், இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ஜூலை 26ஆம் திகதி கொண்டாடப்படும் மாலைதீவின் சுதந்திர தினத்துக்குப் பின்னர் இந்தப் பயணம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு சுதந்திர தின நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அனுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு பயண ஒழுங்கு பேச்சுக்கள் நடப்பதை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு இன்னமும் இந்தப் பயணம் உறுதியாகவில்லை என்றும் கூறியுள்ளது.