திறைசேரி செயலாளர் ஆகிறார் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அவர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இன்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதேவேளை கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நிதி அமைச்சின் செயலாளராகவும், திறைசேரி செயலாளராகவும் பொறுப்பேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக இருந்த கலாநிதி மகிந்த சிறிவர்த்தன ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.