சிறிலங்கா விரைவாக செயற்படவில்லை- ஜெனிவாவில் அனுசரணை நாடுகள் கவலை
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியன தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறிலங்கா அரசாங்கம் விரைவாகச் செயற்படவில்லை என, அனுசணை நாடுகள் குழு தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வில், பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலியானர் சான்டர்ஸ் (Eleanor Sanders) சிறிலங்கா தொடர்பான அனுசரணை நாடுகள் குழுவின் சார்பில் உரையாற்றினார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் ஆண்டு அறிக்கை மீது நடத்தப்பட்ட விவாதத்தில், கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சிறிலங்கா அனுசரணை நாடுகளின் குழுவின் சார்பாக அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில்,
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரே,
சிறிலங்காவில் உங்கள் பணியகத்தின், செயற்பாடுகளுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
மே மாதத்தில் சிறிலங்காவில் உள்ளூரைாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம்.
மேலும் 2009 ஆம் ஆண்டு ஆயுத மோதலின் முடிவில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் விடயத்தில், இந்த ஆண்டு மிகவும் அமைதியான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
அதே நேரத்தில், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியவற்றில் சிறிலங்கா அரசாங்கம் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில், முன்னேற்றங்கள் குறைவாக இருப்பது குறித்து நாங்கள் தொடர்ந்து கவலை கொண்டுள்ளோம்.
நீண்ட காலமாக தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் நிலையை மாற்றவும், ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயற்படுவதை உறுதி செய்யவும் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
உள்ளடக்கிய மற்றும் விரிவான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறை, பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் முக்கியமானது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறினாலும், அதைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.
காணாமல் போனோர் தொடர்பான பணியகத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதன் மூலம் தீர்க்கப்படாத, வலுக்கட்டாயமாக காணாமல் போன பல வழக்குகளைத் தீர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
இந்தப் பிரச்சினைகளில் சிறிலங்கா அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமாகப் பணியாற்ற எங்கள் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.