மேலும்

கொழும்பு மாநகரசபை முதல்வர் தெரிவில் சர்ச்சை

கொழும்பு மாநகர சபை முதல்வராக வராய் கலி பால்தசார் தெரிவு செய்யப்பட்டதில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

நேற்றுக்காலை மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிக ஜயசுந்தரவின் தலைமையில் நடந்த அமர்வில்,  இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு. 61 வாக்குகளைப் பெற்ற வராய் கலி பால்தசார் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்து போட்டியில் நிறுத்தப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர், ரிசா ஷாரூக் 54 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில், அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்காக 59 ஆசனங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை.

தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும் பெற்ற நிலையில், பிற கட்சிகள் சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க வேண்டிய நிலையில் இருந்தன.

நேற்று நடந்த முதல்வரைத் தெரிவு செய்யும் அமர்வில். 29 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியும், 13 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் பகிரங்க வாக்கெடுப்பை கோரிய போது, தேசிய மக்கள் சக்தி இரகசிய வாக்கெடுப்பைக் கோரியது.

இதனால் சுமார் 40 நிமிடங்கள் குழப்பம் நீடித்த நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து இரகசிய வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், மேல்  மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிக ஜெயசுந்தர இரகசிய வாக்கெடுப்பை நடத்தியிருந்தார்.

உள்ளூராட்சிச் சட்டத்தின்படி, வாக்களிப்பு,திறந்த வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என, இரகசிய வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்.

நேற்றைய இரகசிய வாக்கெடுப்புக்கு முன்னதாக, இரு கட்சிகளும் முதல்வர் பதவியைப் பெறுவதற்குத் தேவையான உறுப்பினர்களை வைத்திருப்பதாக கூறியிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐ.தே.க (13 இடங்கள்), சிறிலங்கா பொதுஜன பெரமுன (5 இடங்கள்) மற்றும் பொதுஜன முன்னணி (1 இடம்) ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தது. 2 உறுப்பினர்களைக் கொண்ட சர்வஜன பலயவும் ஆதரவு தெரிவித்திருந்த போதும், முதல்வர் பதவியை பெறுவதற்குத் தேவையான இலக்கை அடைய முடியவில்லை.

கொழும்பு மாநகர சபையில், எதிர்க்கட்சி 69 உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருப்பதாக கூறிய போதும்,  இரகசிய வாக்கெடுப்பில் 54 உறுப்பினர்களின் ஆதரவையே பெற முடிந்துள்ளது.

பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுடன் தேசிய மக்கள் கட்சி இணக்கப்பாட்டை ஏற்படுத்தியதன் மூலம், அது 61உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டது.

இது அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான ஆசனங்களின் எண்ணிக்கையை விட இரண்டு அதிகமாகும்.

இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி, 1954ஆம் ஆண்டுக்குப் பின்னர், முதல் முறையாக கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை இழந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *