மேலும்

சிறிலங்காவில் எரிபொருள் விலைகளில் உடனடிப் பாதிப்பு இல்லை

உலகச் சந்தையில்  ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை அதிகரிப்பு, உள்ளூர் சந்தையில் எரிபொருள் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஈரான்- இஸ்ரேல் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து,வெள்ளிக்கிழமை உலகச் சந்தையில் எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க மசகு எண்ணெய் 7.26 சதவீதம் அதிகரித்து,  பீப்பாய் ஒன்று 72.98 டொலராகவும், பிரென்ட்மசகு எண்ணெய் 7 சதவீதம் அதிகரித்து, 74.23 டொலராகவும் விற்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலைகளால் சிறிலங்காவுக்கு வரும் எண்ணெய் கப்பல்கள் ஏதும் தாமதங்கள், ஏற்பட்டதாகவோ, திருப்பி விடப்பட்டதாகவோ தகவல் இல்லை என்று பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

நாங்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறோம். ஆனால் இப்போது வரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

எனினும் எதிர்காலத்தில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

ஈரானிடமிருந்தோ அல்லது அந்தப் பகுதியிலிருந்தோ நாங்கள் எதையும் வாங்காததால் எந்த நேரடி தாக்கத்தையும் நாங்கள் எதிர்கொள்ளவில்லை.

தற்போதைய மோதல்கள், எங்கள் மீது நேரடி விளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை.

ஈரானிய விநியோகங்கள் தடைப்பட்டால் மட்டுமே சாத்தியமான விளைவு ஏற்படும்.

அப்போது நாம் தற்போது பெற்று வரும் எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கக் கூடும். அதுதான் தற்போது எங்களுக்கு உள்ள ஒரே கவலை.

சிறிலங்கா வளைகுடா பிராந்தியத்திலிருந்து எரிபொருளை வாங்குகின்ற போதும், ஈரான் அல்லது ஈராக்கில் இருந்து அவற்றை கொள்வனவு செய்வதில்லை.

அந்த நாடுகளுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, எனவே எங்கள் செயல்பாடுகளில் நேரடி பாதிப்பு இல்லை. “ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *