சிறிலங்கா அதிபருக்கு எதிராக பெர்லினில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஜெர்மனியில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாரிய அட்டூழியங்களுக்குப் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, பெர்லினில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபருக்கு ஜெர்மன் அதிபர் பிராங் வோல்டன் ஸ்ரெய்ன்மியர் Frank-Walter Steinmeier வரவேற்பு அளித்த போது, பெல்லிவூ மாளிகைக்கு (Bellevue Palace) வெளியே புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்புடன் சிறிலங்கா அதிபரின் வாகன அணி கடந்த சென்ற போது, பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வழங்கப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள், உரத்த குரலில் முழக்கங்களை எழுப்பினர்.
ஜெர்மன் ஆயுதப்படைகளின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களின் நீதி கோரும் குரல்கள் அந்த மாளிகை வளாகம் எங்கும் எதிரொலித்தது.
சிறிலங்காவில் தொடரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் இடம்பெறாதமை தொடர்பாகவும் அனுரகுமார திசநாயக்கவுக்கு ஜெர்மனி அரசாங்கம், அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம், வலியுறுத்தியுள்ள நிலையில் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிறிலங்கா அரசாங்கங்கள், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய மூத்த அதிகாரிகளைப் பாதுகாத்து, நீதியை முன்னேற்றுவதற்கான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முயற்சிகளைத் தடுத்து வருவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.