“இன்னொரு பிரபாகரன் மீண்டும் பிறப்பார்“ – இந்திய இராணுவ முன்னாள் தளபதி
சிறிலங்காவில் சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துமானால் இன்னொரு பிரபாகரன் அடுத்த 20- 25 ஆண்டுகளில் மீண்டும் பிறப்பார் என இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அடா ஹஸ்னைன் ( Ata Hasnain) தெரிவித்துள்ளார்.
என்டிரிவிக்கு அளித்திருந்த செவ்வி ஒன்றிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவில் இன்னமும், இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதையும் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய லெப்.ஜெனரல் அடா ஹஸ்னைன், சுட்டிக்காட்டியுள்ளார்.
நான் சிறிலங்காவில் இருந்த காலம் தான் எனது முமுழ இராணுவ வாழ்க்கையிலும் மிகவும் கடினமான காலப்பகுதி என நான் நினைக்கிறேன்.
120 பேர் கொண்ட எனது தலைமையிலான கொம்பனி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் நிலைகொண்டிருந்தது.
அது தான், விடுதலைப் புலிகளின் குகை, அவர்களின் கோட்டையாக இருந்தது.
அங்கு எல்லா இடங்களிலும் அடிமட்டத்தில், துணை தந்திரோபாய மட்டத்தில் அவர்களுடன் நெருக்கமாக போரிட வேண்டிய நிலை இருந்தது.
அங்கு நான் எனது தொழிலை மீண்டும் கற்றுக்கொண்டேன்.
சிறிலங்காவில் மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று நான் உணர்கிறேன்.
பெரும்பான்மையினருக்கு எதிரான தமிழர்களின் விரோதம் இன்னமும் தொடர்கிறது.
அடுத்த 20-25 ஆண்டுகளில், ஒரு பிரபாகரன் மீண்டும் பிறப்பார் என்று ஒரு கட்டுரையின் முடிவாக நான் எழுதினேன்.
சிங்கள பெரும்பான்மையினர் தமிழ் சிறுபான்மையினருடன் எதிலும் சமரசம் செய்யத் தயாராக இல்லை.
ஊடகங்களில் வந்த ஆத்திரமூட்டும் அறிக்கைகள் போன்றவை, இந்த நிலைமை இன்னும் முடிவடையவில்லை என்று என்னை நம்ப வைத்தன.
தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்கின்றன. இராணுவ ரீதியாக, விடுதலைப் புலிகளையும், அவர்களின் தளங்களையும் அழிக்க முடியும்.
விடுதலைப் புலிகள் எனது எதிரியாகவும் இருந்திருக்கிறார்கள், ஆனால் இன்று, நான் அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறேன், இதனைச் சொல்கிறேன்.”என்றும், லெப்.ஜெனரல் அடா ஹஸ்னைன், தெரிவித்துள்ளார்.