மேலும்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது

பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், துஷார உபுல்தெனிய, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பின் கீழ்,  கைதி ஒருவர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பாக, மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை அடுத்தே இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறு குற்றமிழைத்த கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போது, அதிபர் செயலகத்தின் ஒப்புதலைப் பெறாத – 4 மில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புடைய  அதுல திலகரத்ன என்ற கைதி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா வெளிப்படுத்தியதை அடுத்து, அதிபர் செயலகம் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து, குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் அனுராதபுர சிறைச்சாலையின் உதவி ஆணையாளர் கைது செய்யப்பட்டு 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மோசடிகளுடன் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ள நிலையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அவரை உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்தி, கட்டாய விடுமுறையில் அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட சில மணித்தியாலங்களின் பின்னர் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *