மேலும்

சிறிலங்கா அதிபர் தேர்தல் – வெளியானது சிறப்பு அரசிதழ் அறிவிப்பு

சிறிலங்காவின் புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக சிறப்பு அரசிதழ் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்க அச்சகத்தினால் இந்த சிறப்பு அரசிதழ் அறிவிப்பு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம், 2020ஜனவரி 7ஆம் நாள் முடிவடையவுள்ள நிலையில்,

பதவியில் உள்ள அதிபரின் பதவிக்காலம், முடிவடைவதற்கு ஒரு மாதத்துக்கு குறையாததும், இரண்டு மாதங்களுக்கு மேற்படாததுமான காலப்பகுதிக்குள், அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, அரசியலமைப்பின் 31 ஆவது பிரிவின் 3 ஆவது பந்தியில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய,

அரசியலமைப்பின் 104ஆவது, உறுப்புரையோடு சேர்த்து வாசிக்கப்படும், 1981 ஆம் ஆண்டின் 15 ஆம், இலக்க அதிபர்  தேர்தல்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவு என்பவற்றால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின்
பயனைக்கொண்டு,

1. 2019, ஒக்ருாபர் மாதம் 07 ஆம் நாளை, அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களைப் பெயர் குறித்து
நியமிப்பதற்கான நாளாகவும்,

2. தேர்தல்கள் செயலகம் , சரண மாவத்தை, இராஜகிரிய – இதனை தேர்தலுக்கான வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிப்பதற்கான இடமாகவும்,

3. 2019, நொவம்பர் மாதம் 16 ஆம் நாளை அத்தகைய  தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய நாளாகவும், இக்கட்டளை மூலம் நிர்ணயிக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதில், தேர்தல் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் ஒப்பமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *