மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்
இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில், கடந்த நான்கரை ஆண்டுகளாக, தீவிரமான முனைப்புக் காட்டி வந்த அமெரிக்கா, வரும் நாட்களில் அவ்வாறான தீவிர முனைப்பைக் காட்டுமா என்ற சந்தேகம் தோன்றியிருக்கிறது.
இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த கொலம்பகே, அண்மையில் ஒரு செவ்வியில், பாதுகாப்பு உறவுகள் ரீதியாக அமெரிக்காவுக்குத் தான் இலங்கை முக்கியமே தவிர, இலங்கைக்கு அமெரிக்கா முக்கியம் அல்ல என்ற தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார். ஒரு வகையில் இது முற்றிலும் உண்மையான கருத்து தான்.
இப்போது இந்தோ- பசுபிக் பாதுகாப்புக் கொள்கையும், அதற்கான மூலோபாயமும் தான், அமெரிக்காவின் முதன்மையான பாதுகாப்பு வியூகமாக இருக்கிறது. அமெரிக்காவின் பெரும்பகுதி படைகளும், தளங்களும், போர்க்கலங்களும் இங்கேயே தரித்து நிற்கின்றன.
அவ்வாறானதொரு பிராந்தியத்தின் – கேந்திர முனையில் அமைந்திருக்கின்ற இலங்கைத்தீவு அமெரிக்காவுக்கு மிகமிக முக்கியமானது. அதனை உணர்ந்தே 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையுடனான உறவுகளை அமெரிக்கா வலுப்படுத்தி வந்தது.
ஆனால், இப்போது அந்த உறவுகளில் ‘விக்கல்’ நிலை வந்திருக்கிறது.
இலங்கையுடன் அமெரிக்கா கைச்சாத்திட விரும்பிய ‘சோபா’(SOFA) அல்லது ‘விஎவ்ஏ’ (VFA) உடன்பாடு விடயத்தில் இலங்கை அரசாங்கம்- குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- எடுத்துள்ள முடிவு, அமெரிக்காவுக்கு திருப்தியளிக்கவில்லை. இது முதலாவது விடயம்.
நம்பகமான போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதையும் அமெரிக்காவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது இரண்டாவது விடயம்.
இந்த இரண்டு விடயங்களும், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அண்மைக் காலங்களில் நீடித்து வந்த நெருங்கிய இராணுவ உறவுகளுக்கு சவாலாக மாறியிருக்கின்றன.
முதலாவது விடயமான ‘சோபா’ அல்லது ‘விஎவ்ஏ’ உடன்பாடு விடயத்தில் அமெரிக்கா தனது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பது போலவே கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
ஏனென்றால், இலங்கையுடன் ஒரு உடன்பாட்டுக்கு அமெரிக்காவினால் ஓரளவுக்கு மேல் அழுத்தம் கொடுக்க முடியாது. அவ்வாறு செய்தால் அது ஒரு நாட்டின் இறைமையை – சுதந்திரத்தை மீறுகின்ற செயல் என்று பார்க்கப்படும்.
அவ்வாறான நிலை ஏற்படுவதை தவிர்க்கவே, “இதுகுறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம், எப்போது என்றில்லை. உடன்பாடு ஏற்படும் போது, இன்றோ நாளையோ, அடுத்த ஆண்டோ கையெழுத்திடுவோம்” என்ற தொனியில் அமெரிக்க அதிகாரிகள் கருத்து வெளியிடுகிறார்கள்.
ஆனால், இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரத்தில், அமெரிக்காவின் நிலைப்பாடு அவ்வாறானதான இருக்கவில்லை.
இலங்கை அரசாங்கத்தின்- குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அந்த முடிவை அமெரிக்கா ஏற்கவில்லை. அதற்கு கவலையை எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.
இராணுவத் தளபதி நியமன விடயத்தில் தலையிடவில்லை என்று அமெரிக்கா கூறுகின்ற அதேவேளை, குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய ஒருவர் உயர் பதவிக்கு நியமிக்கப்படுவதால், இலங்கையுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு உறவுகள் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறது.
வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் வெளியிட்டிருந்த இந்த எச்சரிக்கையை இலங்கை அரச தரப்பு அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தான், அட்மிரல் கொலம்பகேயிடம் இருந்து, இலங்கைக்கு அமெரிக்கா முக்கியம் இல்லை, அமெரிக்காவுக்கே இலங்கை முக்கியம் என்ற தொனியிலான கருத்து வெளிவந்திருந்தது.
அமெரிக்காவுக்கு பாதுகாப்பு ரீதியாக – பூகோள அரசியல் ரீதியாக, இலங்கை முக்கியமானதாக இருந்தாலும், இலங்கையின் இப்போதைய அணுகுமுறைக்கேற்ப அமெரிக்கா வளைந்து நெகிழ்ந்து கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறான ஒன்றாகவே தெரிகிறது.
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில், கடந்த மாத இறுதியில் நடத்தப்பட்ட கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில், அதற்கான அறிகுறிகள் வெளிப்பட்டிருந்தன.
அந்தக் கருத்தரங்கில், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கவில்லை.
கடந்த ஆண்டு 87 நாடுகள் பங்கேற்ற கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்த ஆண்டு 42 நாடுகளே பங்கேற்றன.
2011ஆம் ஆண்டில் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கை இலங்கை இராணுவம் நடத்த ஆரம்பித்தபோது, அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. குறைந்தளவு நாடுகளே அதில் பங்கேற்றன.
ஆனாலும், அமெரிக்கா 2011ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் பிரதிநிதிகளை அனுப்பியது. அமெரிக்க தூதுவர், பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் பங்கேற்று வந்துள்ளனர்.
இந்த ஆண்டும் அமெரிக்க தூதரகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் யாரும் பங்கேற்கவில்லை.
“எமக்கு அழைப்பு வந்தது, ஆனால் வேறு கடமைகள் இருந்தன” என்று அமெரிக்க தூதரகப் பேச்சாளர் ஒருவர் மிக அலட்சியமாக கூறியிருக்கிறார்.
கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கை விட, வேறு முக்கியமான பணிகள் இருந்தன- அதனைக் கவனித்தோம் என்று கொழும்பு தூதரக அதிகாரிகள் கூறியது, எதனைக் காட்டுகிறது?
அமெரிக்காவுக்குத் தான் இலங்கை முக்கியம், அதனால் பாதுகாப்பு உறவுகள் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கைக்கு விழுந்த முதல் அடி இது.
இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகள் தான் முக்கியமானது, முதன்மையானது என்றால், இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கா விழுந்தடித்துக் கொண்டு பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
அதுபோலவே, புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை பல்வேறு நாடுகளின் தூதுவர்கள், பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து வாழ்த்துக் கூறியுள்ள போதும், இதுவரை அமெரிக்க தூதுவரோ பாதுகாப்பு ஆலோசகரோ, அவரைச் சந்திக்கவில்லை.
இந்த இரண்டு விடயங்களில் இருந்தும் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகள் விடயத்தில், முன்னரைப் போன்ற நெகிழ்வுத்தன்மையை அமெரிக்கா கடைப்பிடிக்காது என்பதே அது.
“இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகள் முக்கியமானது. அதனை மேலும் வலுப்படுத்துவோம்” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் அனைவரும் பகிரங்கமாகவே கூறி வந்திருக்கிறார்கள்.
ஆனாலும், அவ்வாறான ஒரு உறவு தேவையானதாக இருந்தபோதும், தனக்கு உடன்பாடாக இல்லாத விடயத்தில் விட்டுக்கொடுக்க அமெரிக்கா தயாரில்லை என்பதை வெளிப்படுத்தி வருகிறது.
அதற்காக, ஒட்டுமொத்தமாக இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளைத் துண்டித்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. அது நடக்கப் போவதும் இல்லை.
ஆனால், இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகள் விடயத்தில் அமெரிக்கா சில வடிகட்டல்களை மேற்கொள்ளக் கூடும்.
இலங்கை இராணுவத்துடனான உறவுகள் தொடர்புகளை குறிப்பிட்ட காலத்துக்கு இடைநிறுத்தி வைக்கும், அல்லது மட்டுப்படுத்தி வைக்கும் முடிவை அமெரிக்கா எடுக்கலாம்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், நாடுகளின் மனித உரிமைகள் நிலை தொடர்பான ஆண்டு அறிக்கையை வெளியிடுவது வழக்கம். , சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், , ‘மனித உரிமை கரிசனைகளால், இலங்கையுடனான இராணுவ உறவுகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் பேணப்படுகின்றன” என்றொரு வாக்கியம் இடம்பெற்று வந்தது.
கடந்த ஓரிரு ஆண்டுகளாகத் தான் இந்த வாக்கியம், அந்த அறிக்கையில் இடம்பெறுவதில்லை.
இலங்கையுடனான இராணுவ உறவுகளை அமெரிக்கா மட்டுப்படுத்தியிருந்த போது, பெரும்பாலும் இராணுவத்தினருக்குத் தான், பாதிப்பு ஏற்பட்டது. ஏனென்றால் இராணுவம் மீதே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அதிகளவில் இருந்தன.
அதனால் இராணுவத்தை தவிர்த்து, கடற்படைக்கான மனிதாபிமான உதவிகளையும், கண்ணிவெடி அகற்றுவதற்கான உதவிகள் பயிற்சிகளையுமே அப்போது அமெரிக்கா வழங்கி வந்தது.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னரும் கூட, அமெரிக்கா இலங்கை கடற்படைக்கான உதவிகள், பயிற்சிகளையே அதிகளவில் வழங்கி வந்தது. ஒரு கட்டத்தில் இராணுவத்துக்கும் உதவிகள் பயிற்சி வசதிகளை வழங்கத் தொடங்கியது.
இப்போதைய நிலையில், மீண்டும், இராணுவத்துடனான தொடர்புகள், உறவுகளை மட்டுப்படுத்திக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்தாலும், கடற்படையுடனான உறவுகள், உதவிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளுமா என்பது சந்தேகம் தான்.
ஏனென்றால், இலங்கைக் கடற்படையை பலப்படுத்துவதில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது.
போர்க்கப்பல்களைக் கொடுத்தும், கடற்படையின் மரைன் கொமாண்டோ படைப்பிரிவை உருவாக்குவதற்றகான உதவிகள், பயிற்சிகளை அளித்தும், அமெரிக்கா பெரும் பங்களிப்பை செய்திருந்தது,
அதற்குக் காரணம், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக்கான ஒரு பங்காளியாக இலங்கை கடற்படையை வைத்திருப்பதேயாகும்.
அவ்வாறான நிலையில், இந்தளவுக்கு கட்டியெழுப்பப்பட்ட இலங்கை கடற்படையுடன் உறவுகளை திடீரென முறித்துக் கொள்ள அமெரிக்கா விரும்பாது,
ஆனால் இலங்கை இராணுவத்துடன் அவ்வாறான உறவுகளை முறிப்பது அமெரிக்காவுக்கு பெரிய விடயமாக இருக்காது.
ஏனென்றால், இலங்கை இராணுவத்துக்குத் தான், அமெரிக்காவின் தயவு தேவையே தவிர, அமெரிக்காவுக்கு அல்ல.
-சுபத்ரா
வழிமூலம்- வீரகேசரி வாரவெளியீடு