பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா?
தற்போதைய அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
பலாலி விமான நிலையம் பற்றிய செய்திகள் இப்போது ஊடகங்களில் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன.
இங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு மாத்திரமன்றி, மத்திய கிழக்கு, அவுஸ்ரேலியா, சீனாவுக்கும் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் செய்திகளில் கூறப்படுகிறது.
வடக்கிலுள்ள மக்களின் நலன்கருதி, இந்த அபிவிருத்திப் பணி மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.
பலாலி விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவைகள் இடம்பெறுவது, வடக்கில் உள்ள மக்களுக்கு மாத்திரமன்றி, அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை.
இதனை இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நேரகாலத்துடனேயே ஆரம்பித்திருக்க முடியும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2015இல் இலங்கைக்கு வந்திருந்த போதே, பயணிகள் கப்பல் சேவை மற்றும் பலாலி விமான நிலைய விரிவாக்கம் ஆகியன தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டது.
எனினும், இந்த அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போது தான், இந்த திட்டத்தில் கை வைத்திருக்கிறது.
ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிந்ததும், செப்ரெம்பரில் தென்னிந்தியாவுக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டது.
ஒரே மாதத்தில், ஓடுபாதை விரிவாக்கம், விமான நிலைய முனைய வசதிகள், சுங்க, குடிவரவுப் பகுதிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வியை எழுப்பாமலேயே இவ்வாறான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன.
எனினும், கடந்தவாரம் பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடர்பாக ஆராயும் வகையில், அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில், ஒக்ரோபர் 15ஆம் திகதி, விமான நிலையத்தை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது,
அதற்குள்ளாகவே குடிநீர் இணைப்பு, மின்சார வசதி, ஓடுபாதை விரிவாக்கம், ஏனைய வசதிகள் செய்து முடிக்கப்படுமா என்ற கேள்விகள் ஒரு புறத்தில் இருக்க, இந்த விமான நிலையம் திறக்கப்பட்டதும் இங்கிருந்து சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுமா- இது வடக்கிலுள்ள மக்களுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்குமா என்பதும் சந்தேகமாகத் தான் உள்ளது.
ஏனென்றால், பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட விரிவாக்கப் பணிகள் முடிந்தாலும், ஓடுபாதை நீளம் மற்றும் அங்குள்ள வசதிகள் கருதி, ஏ-320 போன்ற பெரிய பயணிகள் விமானங்களை இப்போதைக்கு தரையிறக்க முடியாது.
இத்தகைய விமானங்கள் தான், தொலைதூரப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இரண்டாவது கட்ட விரிவாக்கப் பணிகள் முடிந்த பின்னர் தான், இங்கிருந்து தொலைதூரப் பயணங்களைப் பற்றி சிந்திக்க முடியும். அதுவரை குறுந்தூர விமான சேவைகள் தான் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த குறுந்தூர விமான சேவைகள் வெற்றிகரமானதாக அமைந்தால் மட்டுமே, அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகளும், அதன் மூலம் தொலைதூர விமான சேவைகளும் சாத்தியப்படும்.
இல்லாவிடின், வணிக வாய்ப்பு இல்லை என்று கூறி, மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டது போல, மீண்டும் பலாலி விமான நிலையம், விமானப்படையின் விமானத்தளமாகவே மாறி விடும்.
எனவே, பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக திறக்கப்படும் போது, அது சாத்தியமானளவுக்கு வணிக ரீதியாக வெற்றிகரமானதாக அமைய வேண்டும்.
அவ்வாறு வணிக ரீதியாக சாத்தியமான ஒரு இடமாக, அடையாளப்படுத்தப்படாமல் போனால், பலாலியின் சர்வதேச விமான நிலைய கனவு கருகி விடும்.
இந்த திட்டம் கைவிடப்பட்டால், இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, வடக்கிலுள்ள மக்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.
ஏனென்றால், வடக்கில் உள்ள மக்கள், 6 மணித்தியாலங்களைச் செலவிட்டே, கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
கட்டுநாயக்கவில் இருந்து 45 நிமிடங்களில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற விமான நிலையங்களை சென்றடைந்து விட முடியும். ஆனால் அந்தப் பயணத்துக்காக, வடக்கிலுள்ள மக்கள் அதைவிட எட்டு மடங்கு நேரம் தரைவழிப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டால், வடக்கிலுள்ள மக்களுக்கு நேரச் செலவும், பணச் செலவும் மிச்சமாகும். அதுமாத்திரமன்றி, தரைவழிப் போக்குவரத்து ஆபத்துக்களில் இருந்தும் தப்பிக் கொள்ளலாம்.
வெளிநாட்டில் இருந்து வந்து வடக்கிற்கு சென்ற – அங்கு பயணத்தை முடித்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு திரும்பிய பலர், அல்லது அவர்களை வரவேற்க, வழியனுப்பச் சென்ற பலர் அண்மைக்காலங்களில் அதிகளவில் விபத்துக்களில் சிக்கியிருக்கின்றனர்.
பலாலி விமான நிலையம் ஊடாக பயணங்கள் இடம்பெற்றால், இதுபோன்ற ஆபத்துக்களை தவிர்க்க முடியும்.
பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட விரிவாக்கப் பணிகள் முடிந்ததும், 90இற்கு உட்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்களையே சேவையில் ஈடுபடுத்த முடியும்.
இப்போதைக்கு பலாலியில் இருந்து விமான சேவைகளை ஆரம்பிக்க இந்தியாவின் இரண்டு விமான நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘எயர் இந்தியா’ நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘அலையன்ஸ் எயர்’ நிறுவனமும், இந்தியாவில் அதிகளவு பயணிகளைக் கையாளும் மிகப்பெரிய விமான நிறுவனமான ‘இன்டிகோ’வும், பலாலிக்கான சேவைகளை ஆரம்பிப்பதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்த இரண்டு நிறுவனங்களிடம், பலாலிக்கான பயணங்களை மேற்கொள்ளக் கூடிய, 72 ஆசனங்களைக் கொண்ட ATR 72-600 விமானங்கள் இருக்கின்றன என்பது முக்கியமான அம்சம்.
இவ்வாறான விமானங்களின் மூலம், தென்னிந்திய நகரங்களுக்கான விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்க முடியும். அது வணிக ரீதியாக வெற்றிகரமானதாக அமையும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
குறிப்பாக, தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கான விமான சேவைகளை ஆரம்பித்தால், அது வடக்கில் உள்ள மக்களுக்கு மாத்திரமன்றி, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது,
தமிழகத்துக்கும் வடக்கிற்கும் இடையில் மொழி, இன, கலாசார ரீதியான நெருக்கமான பிணைப்பும், தொடர்புகளும் உள்ளன. அதைவிட சுற்றுலா, ஆலய தரிசனம், திருமணம் போன்ற விழாக்கள், மாத்திரமன்றி பொருட்கள் கொள்வனவு உள்ளிட்ட வணிக ரீதியான தேவைகளுக்காகவும் நாளாந்தம் வடக்கில் இருந்து பெருமளவானோர் தமிழகம் சென்று வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், பலாலி விமான நிலையத்தில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கான சேவைகளை ஆரம்பிப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதுவே, வடக்கிலுள்ள மக்களுக்கும், பலாலி விமான நிலையத்தின் வணிக ரீதியான வெற்றிக்கும் உதவியாக அமையும்.
ஆனால், தமிழகத்துக்கான நேரடி விமான சேவைகள் எதுவும் பலாலியில் இருந்து இப்போதைக்கு ஆரம்பிக்கப்படப் போவதில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.
பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களுக்கான விமான சேவைகளே முதற்கட்டமாக பலாலியில் இருந்து தொடங்கப்படவுள்ளன.
இந்த விமான சேவைகள், வடக்கிலுள்ள மக்களுக்கோ அல்லது, சுற்றுலாத் துறைக்கோ பயனுள்ளதொன்றாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்.
வடக்கைப் பொறுத்தவரையில் சுற்றுலாத்துறை வளரவில்லை. இங்குள்ள சுற்றுலாத் தலங்கள் வெளிநாட்டுப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் படி பிரசாரப்படுத்தப்படவில்லை. சுற்றுலாத் தலங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை.
எனவே, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களில் இருந்து, பலாலிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதுபோலவே, இந்த நகரங்களுக்கும் வடக்கிற்கும் தொடர்புகள் அரிது.
எனவே, வடக்கிலுள்ள மக்களும் இந்த சேவைகளால் பயனடைய முடியாது. இது கடைசியில் பலாலி விமான நிலையம் வணிக ரீதியாக வெற்றிகரமானது அல்ல என்று முத்திரை குத்தப்படுவதற்கே வழிவகுக்கும்.
வடக்கில் உள்ள மக்களுக்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதாக கூறுகின்ற அரசாங்கம், பலாலியில் இருந்து தமிழகத்துக்கான விமான சேவைகளை நடத்த தயங்குவது ஏன் என்ற மிகப் பெரிய கேள்வி உள்ளது,
பலாலி விமான நிலையத்தினால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருவாய் குறைந்து விடும், சிறிலங்கன் விமான சேவையின் வருமானம் பாதிக்கப்படும் என்ற அச்சம் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
இதில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருமானம் பாதிக்கப்படும் என்று கூறப்படும் காரணம் வலுவானதல்ல. ஏனென்றால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருமானமும், பலாலியின் வருமானமும், ஒரே பொதிக்குள் தான் சென்றடையும். எனவே, ஒன்றில் ஏற்படும் இழப்பு இன்னொன்றினால் நிரவப்படும்.
ஆனால், அடுத்த காரணியான சிறிலங்கன் விமான சேவையின் வருவாய் பாதிக்கப்படும் என்ற அச்சம் நியாயமானது. சிறிலங்கன் விமான சேவை தினமும் சென்னைக்கு நான்கு சேவைகளையும், திருச்சிக்கு இரண்டு சேவைகளையும், கோயமுத்தூர் மற்றும் மதுரைக்கு தலா ஒரு சேவைகளையும் நடத்துகிறது. இவை அதிகபட்ச வருமானத்தைக் கொடுக்கின்ற சேவைகள்.
அதுமாத்திரமன்றி, சிறிலங்கன் விமான சேவை திருச்சி, சென்னை, மதுரை, கோவையில் இருந்து மத்திய கிழக்கிற்கான பயணிகளையும் ஏற்றி வந்து கொழும்பு ஊடாக அனுப்புகிறது.
பலாலியில் இருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டால், சென்னை, திருச்சி, மதுரை, கோவைக்கான சிறிலங்கன் விமான சேவையின் பயணங்கள் நிச்சயமாக குறையும். அது அதிக வருவாயுள்ள இடங்களை இழப்பதற்கு மாத்திரமன்றி, மத்திய கிழக்கிற்கான Transit பயணிகளை ஏற்றி வர முடியாத நிலையையும் ஏற்படுத்தும்.
அதனை விட, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா, இடங்களில் இருந்து சிறிலங்கன் விமான சேவையில் பயணம் மேற்கொள்பவர்கள் கூட, சென்னை வழியாக பலாலிக்கான பயணத் திட்டங்களை மேற்கொள்ளக் கூடும். அதுவும் சிறிலங்கன் விமான சேவையின் வருமானத்தைப் பாதிக்கும்.
சரி, அவ்வாறாயின், பலாலிக்கான சேவைகளை சிறிலங்கன் விமான சேவையே ஆரம்பிக்கலாமே என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
சிறிலங்கன் விமான சேவையிடம் 90 பயணிகள் வரை ஏற்றக்கூடிய சிறிய விமானங்கள் இல்லை. அதனிடம் இருப்பது, நடுத்தர உடலமைப்பைக் கொண்ட A-320/ A-321 ரகத்தைச் சேர்ந்த 13 விமானங்களும், நீண்ட உடலமைப்பைக் கொண்ட A-330 ரகத்தைச் சேர்ந்த 13 விமானங்களும் தான் இருக்கின்றன.இவை பலாலியில் தரையிறங்க முடியாது.
பலாலியில் இருந்து சேவையை நடத்த வேண்டும் என்றால், சிறிய ரக விமானங்களை சிறிலங்கன் நிறுவனம் குத்தகைக்குப் பெற வேண்டும் அல்லது கொள்வனவு செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தின் நிதி நிலைமை அதற்கு இடமளிக்குமா என்பது சந்தேகம்.
இந்த நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கு வருமானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தால், பலாலி விமான நிலையத்தை, வடக்கிலுள்ள மக்களுக்கான திட்டமாக கூற முடியாது.
கொடுப்பது போல கொடுத்து, பறிப்பது போல பறிப்பது என்று சொல்லவார்களே அதுபோலத் தான், அரசாங்கம் நடந்து கொள்கிறது.
அவ்வாறாயின், பலாலியில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறோம், என்று தேர்தல் பிரசாரங்களில் ஆளும்கட்சியினர் கூறிக்கொள்வதற்கு மாத்திரமா இந்த திட்டம் இருக்கப் போகிறது?
-என்.கண்ணன்
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு