மேலும்

குரங்கின் கையில் ‘அப்பம்’

இலங்கையில் வாழும் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக தாமே இருக்க வேண்டும் என்பதில், சிங்கள பௌத்த பேரினவாதம், உறுதியான முடிவில் இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு புதிய தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என சில வாரங்களுக்கு முன்னர், அத்துரலியே ரத்தன தேரர், கூறியிருந்தார்.

புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கமும், தமிழர்களுக்கு புதிய தலைமையை உருவாக்கப் போவதாகத் தான் கூறியது. இதிலிருந்து ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் தலைமையை மாத்திரமல்ல, அவர்களின் தலைவிதியையும் தீர்மானிக்கும் சக்தியாக தாமே இருக்க வேண்டும் என்பதே, சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இலக்காக இருக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் போக்கும் செயற்பாடுகளும் முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

அதற்கு முன்னர் தமிழர்களைத் துவைத்தெடுப்பதில் ஆர்வம் காட்டி சிங்கள பௌத்த பேரினவாதம் இப்போது, முஸ்லிம்களின் மீது குறிவைத்திருக்கிறது.

கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில், பௌத்த பிக்குகளின் தலையீடுகளும், போராட்டங்களும், இந்தப் பிரச்சினையை இன்னும் கொளுந்து விட்டு எரியும் சூழ்நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தனியான பிரதேச செயலகமாக பிரித்துக் கொடுக்கும் பிரச்சினை இப்போது ஏற்பட்டதொன்று அல்ல. அது நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினை.

இந்தப் பிரதேசத்தில் அதிக நிலங்களைக் கொண்ட தமிழர்களும், குறுகிய நிலப்பரப்பில் அதிக செறிவுடன் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினை இது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பிரித்துக் கொடுக்க முஸ்லிம் தலைமைகளே மறுத்து வந்திருக்கின்றன. தடைபோட்டு வந்திருக்கின்றன.

கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டபோது கூட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாரிஸ், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில், தமிழ் – முஸ்லிம் தலைமைகளும், அரசாங்கமும் இணைந்து தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதில் காணப்பட்ட நீண்ட இழுபறிகள் தான், வெளித்தரப்புகள் எல்லாம் கையை விட்டுத் துளாவுகின்ற நிலை ஏற்பட்டதற்குக் காரணம்.

இந்த விவகாரத்தில், முஸ்லிம்களின் எதிர்ப்பினால் அரசதரப்பு இழுத்தடிக்கும் போக்கை கையாண்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடாப்பிடியான நிலையில் இருந்திருக்க வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிய நிலை வந்து விட்டது. கல்முனையில் போய் நின்று கொண்டு பலரும் வீராவேசம் பேசுகிறார்கள்.

பௌத்த பிக்குகள் தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறார்கள், போராட்டக் களத்தில் குவிகிறார்கள். இவர்கள் தமிழர் நலனுக்காகத் தான் இவ்வாறு போராடுகிறார்களா- குவிகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

இதெல்லாம், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் மாறிய சூழ்நிலை.

சிங்களவர்களுக்கு தமிழர்கள் எதிரிகள், முஸ்லிம்கள் துரோகிகள் என்று சில நாட்களுக்கு முன்னர் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

சிங்கள பௌத்த பேரினவாதம், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வரை தமிழர்களையே முதன்மையான எதிரிகளாக கருதி வந்தது. இப்போதும் அந்த நிலை மாறி விட்டதாக கருத முடியாது.

அதனால் தான், தமிழர்களின் பூர்வீக அடையாளங்களையும், தனித்துவத்தையும், அதன் மீதான உரிமைகளையும் இல்லாமல் செய்யும் காரியங்களை முன்னெடுத்து வந்தது.

தமிழர்களின் நிலங்களை அபகரித்து, கூறு போட்டு பலவீனமாக்கி, சொந்த நிலங்களில் அவர்களை சிறுபான்மையினராக்கும் குடியேற்றங்களை மேற்கொண்டு, பௌத்த மயமாக்கலை முன்னெடுத்து, தமது திட்டத்தை முன்னெடுத்து வந்தது சிங்கள பௌத்த பேரினவாதம்.

இதற்கெல்லாம் பின்னால், பௌத்த பிக்குகள் தான் இருந்தனர். அவர்களின் தூண்டுதல்களின் மூலமும், திட்டமிடலின் கீழும் தான், அரசியல்வாதிகள் செயற்பட்டனர்.

தமிழர்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாதம் முன்னெடுத்த, அத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னாலும், அவர்களுக்கு முஸ்லிம்களும் பக்கபலமாகவே இருந்தனர் என்பது வரலாற்று உண்மை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் போது கூட, இஸ்லாமிய பயங்கரவாதமும் கூட, சிங்கள பௌத்தர்களை குறிவைக்கவில்லை. தமிழ் மற்றும் கிறிஸ்தவர்களைத் தான் குறிவைத்திருந்தமை குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.

காலம் காலமாக, தமிழர்களை அழிப்பதற்கும், நசுக்குவதற்கும் முஸ்லிம்களைப் பயன்படுத்திக் கொண்ட சிங்கள பௌத்த பேரினவாதம், இப்போது, அப்படியே தலைகீழ் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், சிங்கள பௌத்த பேரினவாதம், முஸ்லிம்களுக்கு விரோதமான அரசியலை முன்னெடுக்கிறது. இது பலமுனைகளில், முன்னெடுக்கப்படுகிறது.

இவ்வாறான ஒரு மூலோபாயத்தில் தமிழர்களையும் பங்காளிகளாக்கிக் கொள்ளும் சதித்திட்டம் மிக சூட்சுமமாக அரங்கேற்றப்படுகிறது.

கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் பௌத்த பிக்குகளின் தலையீடுகளும், அவர்களின் அரசியலும், அதனைத் தான் காட்டுகின்றது.

இது தமிழ் மக்களின் பிரச்சினை. நீண்டகாலமாக தீர்க்கப்படாத, அதேவேளை நியாயமானதொரு கோரிக்கை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

திடீரென இதற்குள் ஏன் பௌத்த பிக்குகள் புகுந்து கொண்டனர்? அவர்களுக்கு இங்கு என்ன வேலை? என்ற கேள்விகளை எழுப்பும் போது தான், இதில் உள்ள சூழ்ச்சிகளை உணர முடியும்.

தமிழர்களுக்கு நியாயம் தேடிக்கொடுக்க வேண்டிய நிலையில் பௌத்த பிக்குகள் இருப்பது துரதிஷ்டமான விடயம்.

தமிழர்களுக்காக பேசுவதற்கு அரசியல் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவர்கள் கையாலாகாதவர்களாக மாறியதால் தான், இந்த நிலை ஏற்பட்டதா?

தமிழர்களின் நலன்களின் மீதும், உரிமைகளின் மீதும் இத்தனை கரிசனை பௌத்த பிக்குகளுக்கு எப்படி வந்தது?

அவ்வாறு கரிசனை கொண்டவர்களாக இருந்திருந்தால், ஆயிரக்கணக்கில் மக்கள் கொன்றழிக்கப்பட்ட போது கொதித்தெழுந்திருக்க வேண்டாமா?

அவ்வாறு அவர்கள் செய்திருந்தால், உண்மையான பௌத்தர்களாக அவர்கள் தமிழர்களால் போற்றப்பட்டிருப்பார்கள். கொண்டாடப்பட்டிருப்பார்கள்.

தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும் உடன்பாடுகள் செய்யப்பட்ட போதெல்லாம் அதனை கிழித்தெறிவதற்கும், எரித்து வீசுவதற்கும், குப்பைக் கூடைக்குள் போடுவதற்கும் தூண்டுதலாகவும் நேரடிக்காரணிகளாகவும் இருந்தவர்கள், பௌத்த பிக்குகள்.

அதிகமாக ஏன் செல்ல வேண்டும், 2002இல் நோர்வேயின் உதவியுடன், செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை கிழித்தெறிந்து, மீண்டும் போரை வெடிக்கச் செய்வதற்காக, அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள், கொழும்பிலும், மாவிலாறிலும் வேறு பல இடங்களிலும் தமது ஆவேசத்தை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பது அனைவரும் அறிந்தது.

அதே அத்துரலியே ரத்தன தேரர் தான், இப்போது கல்முனையில் போய் நின்று கொண்டு தமிழர்களின் உரிமை பற்றி பேசுகிறார்.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த அவர், தமிழர்கள் விரும்பாத இடங்களில் பௌத்த சின்னங்களை அகற்றுமாறு நீதிமன்றங்களுக்கு செல்லவோ, போராட்டங்களை நடத்தவோ வேண்டியதில்லை. நாங்களே அதனை அகற்றுவோம் என்று கூறியிருந்தார்.

ஆனால், முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையாரை துரத்தி விட்டு, புத்தரை குடியமர்த்த ஒரு பௌத்த பிக்கு எங்கிருந்தோ எல்லாம் சிங்களவர்களைக் கூட்டி வந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். இதுபோன்று பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

அதற்கெல்லாம் தீர்வை வழங்காத அத்துரலிய ரத்தன தேரர், யாழ்ப்பாணத்தில் நின்று கொண்டு, இந்து- பௌத்த மதங்களுக்கிடையிலான ஒற்றுமையின் அவசியம் பற்றிப் பேசியது, நீலிக் கண்ணீர் தான்.

ஏன் இந்த நீலிக் கண்ணீர் என்றால், இப்போது சிங்கள பௌத்தத்தின் குறி முஸ்லிம்களின் மீது திரும்பியிருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவர்கள் தமிழர்களையும் சேர்த்துக் கொள்ள முனைகிறார்கள்.

இதன் மூலம், முஸ்லிம்களையும், தமிழர்களையும் மோத விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறார்கள்.

இவ்வாறான மோதல்களை தூண்டி விடுவதன் மூலம், இரண்டு சிறுபான்மை இனங்களையும் தீராப் பகையுடன் அலைய விட முனைகிறார்கள்.

அப்படி மோதிக் கொண்டிருந்தால் தான், கல்முனை விவகாரத்தில் எப்படி மூக்கை நுழைத்தார்களோ, அதுபோலவே, மூக்கை நுழைக்க முடியும்.

பிரித்தானியர்களின் பிரித்தாளும் தந்திரத்தை சிங்கள பௌத்த பேரினவாதம் மிக தந்திரமாக கையாளுகிறது.

சிங்கள பௌத்த பேரினவாதம். காலத்துக்குக் காலம் சிறுபான்மை இனங்களின் மீது, அடக்குமுறைகளை ஏவி வந்திருக்கிறது. உண்மையில் அவர்களுக்கு தமிழர்கள் மீதும் அக்கறையில்லை. முஸ்லிம்களின் மீதும் அக்கறையில்லை.

தேவைக்கேற்ப, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தமிழர்களையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பதற்கு அவர்கள் மாறி மாறி இந்தத் தரப்புகளில் ஒன்றைப் பயன்படுத்த முனைகிறார்கள்.

முன்னர் தமிழர்களை நசுக்குவதற்கு முஸ்லிம்களைப் பயன்படுத்திய சிங்கள பௌத்த பேரினவாதம், இப்போது, முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்களைப் பயன்படுத்த பார்க்கிறது,

அதற்குத் துணைபோகும் விதத்தில், தமிழர் தரப்பில் உள்ள அரசியல்வாதிகள் சிலரும், தமிழ் மக்களின் ஒரு தரப்பினரும், செயற்படுகின்றனர். அவர்களுக்கு இப்போது, ஞானசார தேரரும், அத்துரலியே ரத்தன தேரரும் கடவுள்களாகவே தெரியக் கூடும்.

இவர்கள் எதற்காக தமிழர்களை அரவணைக்கிறார்கள் என்பதை அறியாமலேயே தமிழர் தரப்பிலுள்ள சிலர் பலிக்கடா ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

கல்முனை பிரதேச செயலக விடயத்தில், தமிழர்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது. அதனை எதிர்ப்பதற்கு முஸ்லிம்கள் கூறும் காரணம் அபத்தமானது,

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதில், மூன்றாவது தரப்பாக, பௌத்த பேரினவாதம் தலையீடு செய்வது தான் அதை விட மோசமானது.

ஏனென்றால், இது கடைசியில் குரங்கு அப்பத்தை பங்கிட்ட கதையாகவே முடிந்து போகும்.

-என்.கண்ணன்

நன்றி – வீரகேசரி வாரவெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *