மேலும்

சஹ்ரானை கொழும்பில் சந்தித்த சகோதரி மதனியா – 20 இலட்சம் ரூபா கிடைத்த வழி அம்பலம்

தற்கொலைக் குண்டுதாரியான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் காசிமிடம் இருந்து கொழும்பில் வைத்து, 20 இலட்சம் ரூபாவைப் பெற்றதை, அவரது சகோதரியான, மொகமட் நியாஸ் மதனியா ஒப்புக் கொண்டுள்ளார்.

சஹ்ரானின் இளைய சகோதரியான 25 வயதுடைய மதனியா நேற்றுமுன்தினம் காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில்  கைது செய்யப்பட்டார்.

முன்னதாக அவரது கணவன் நியாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை மதனியாவின் வீட்டைச் சோதனையிட்ட போது, அங்கிருந்து 20 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.

இந்தப் பணம் சஹ்ரானிடம் இருந்து கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், காவல்துறையினர் விசாரணைகளை நடத்தினர்.

இதன்போதே, தனது அண்ணனான சஹ்ரானே இந்தப் பணத்தைக் கொடுத்தார் என்பதை மதனியா ஒப்புக் கொண்டுள்ளார்.

தன்னை கொழும்புக்கு வருமாறு, சஹ்ரான் அழைத்ததாகவும், இதையடுத்து வான் ஒன்றில் கொழும்பு சென்ற தான், சஹ்ரானை கல்கிசையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில்  கடந்த ஏப்ரல் 12ஆம் நாள் சந்தித்தாகவும், மதனியா கூறியுள்ளார்.

இதன்போதே, தேசிய ஜமாத் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக, 20 இலட்சம் ரூபாவை தன்னிடம் சஹ்ரான் கொடுத்தார் என்றும், மதனியா கூறியிருக்கிறார்.

முன்னதாக அவர், தனக்கும் சஹ்ரானுக்கும் நீண்டகாலமாக தொடர்பு இல்லை என்றும், கடந்த ஏப்ரல் 18ஆம் நாளில் இருந்து தனது குடும்பத்தினர் அனைவரும் காணாமல் போய் விட்டனர் என்றும் மதனியா கூறியிருந்தார்.

சஹ்ரானின் நடவடிக்கைகள் மீது தனது கணவன் வெறுப்படைந்திருந்தார் என்றும் அதனால் அவருடன் தமக்கு தொடர்புகள் இல்லை என்றும் பிபிசியிடம் மதனியா தெரிவித்திருந்தார்.

ரில்வான் வீட்டில் தங்கொலை அங்கி

சஹ்ரான் காசிமின் சகோதரரும், சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவருமான மொகமட் ரில்வானின் வீட்டில் இருந்து தற்கொலை தாக்குதலுக்கான அங்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.

காத்தான்குடியில் உள்ள இந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது அங்கு தங்கியிருந்த ரில்வானின் மனைவியின் தாயும், தந்தையும் கைது செய்யப்பட்டனர்.

இங்கிருந்து, தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அங்கி, இரண்டு அலைபேசிகள், வங்கி அட்டைகள், வங்கி கணக்குப் புத்தகங்கள், ரில்வானின் அடையாள அட்டை மற்றும் படங்கள் பலரும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *