மேலும்

குண்டுவெடிப்புகளில் பலியானோர் தொகை 290 ஆக உயர்ந்தது

சிறிலங்காவில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் தேவாலயங்களிலும், ஆடம்பர விடுதிகளிலும், நடத்தப்பட்ட  இந்த தாக்குதல்களில் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

கொழும்பில் 1000 இராணுவத்தினர்

இந்த தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1000 இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

24 கைது

நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டு  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்

குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பேர் தம்புள்ளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தியத்தலாவ பகுதியில் விமானப்படையினரால், தந்தையும இரண்டு மகன்களும், ரி-56 துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு திரும்பிய மைத்திரி அவசர ஆலோசனை

சிங்கப்பூருக்குச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பினார்.

இதையடுத்து, நாட்டின் நிலைமைகள் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்  காலை 9 மணியளவில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அவசரமாக கூட்டப்படும் நாடாளுமன்றம்

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பிற்பகல் 2 மணியளவில்  கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாளை காலை சிறிலங்கா நாடாளுமன்றததின் அவசர கூட்டத்துக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இதில் ஆராயப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *