மேலும்

குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய வான், கார் சிக்கின- மறைவிடங்களும் முற்றுகை

சிறிலங்காவில் நேற்று பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய நபர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பில் கிங்ஸ்பெரி, ஷங்ரி-லா, சினமன் கிரான்ட் விடுதிகளிலும், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்களிலும், தெகிவளை உணவகத்திலும், தெமட்டகொடவில் வீடு ஒன்றிலும் குண்டுகள் வெடித்து 200இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 450 பேர் வரை காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களை தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தினர் என்றும், ஒரே குழுவினரே நன்கு திட்டமிட்டு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய 13 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 10 பேர் மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றுப் பிற்பகல் தெமட்டகொடவில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றை சிறிலங்கா காவல்துறையினர் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.

அப்போது, அங்கிருந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் குண்டை வெடிக்கவைத்துள்ளார். அதில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இரண்டு காவலர்களும் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.

அதேவேளை, அந்த வீட்டுக்குள் பெண் ஒருவரும், இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்தனர்.

இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும், வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த சிலரைக் கைது செய்தனர்.

அத்துடன் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அந்தக் காரில் ஷங்ரி-லா விடுதியில் பயன்படுத்தப்படும் தண்ணீர் போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரமு் மற்றொரு வானுமே, தற்கொலைக் குண்டுதாரிகளையும், குண்டுகளையும் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

குண்டுகளை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வான், சிறிலங்கா காவல்துறையினரை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் வீதியில் கைப்பற்றப்பட்டது. அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் தங்கியிருந்த இடம் என்று சந்தேகிக்கப்படும், வீடு ஒன்றும் நேற்று மாலை பாணந்துறை வடக்கு சரிக்கமுல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட அடுக்குமாடி வீட்டு மறைவிடத்தில் இருந்து ஒருவர் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவரைக் கண்டுபிடிக்க சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தியும் தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *