மேலும்

சிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி – 450 பேர் காயம் (செய்திகளின் தொகுப்பு)

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது என சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 450 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் 66 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு,260 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீர்கொழும்பு மருத்துவமனையில், 104 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.  அங்கு 100 பேர் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

கொழும்பு மருத்துவமனை பணிப்பாளரின் தகவல்

போலந்து. பாகிஸ்தான்,டென்மார்க், அமெரிக்கா, இந்தியா, மொராக்கோ, சீனா, ஜப்பான், பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த 11 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சடலங்களும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனைப் பணிப்பாளர் அனில் ஜெயசிங்க கூறினார்.

அதேவேளை, கொழும்பு வடக்கு மருத்துவமனையில் 30 பேரும், மட்டக்களப்பு மருத்துவமனையில் 69 பேரும், நீர்கொழும்பு மருத்துவமனையில் 55 பேரும், லேடி றிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் 14 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் கூறினார்.

27 வெளிநாட்டவர்களின் சடலங்கள்

27 வெளிநாட்டவர்களின் சடலங்கள் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். மேலும் ஐந்து பேரைக் காணவில்லை என்றும் அவர் கூறினார்.

எனினும், 35 வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதலை ஒருங்கிணைத்த 7 சந்தேகநபர்கள் கைது

இன்றைய குண்டுத் தாக்குதல்களை ஒருங்கிணைத்தனர் என்ற சந்தேகத்தில் 7 பேரைக் கைது செய்திருப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் தற்கொலைக் குண்டுதாரிகளாலேயே நடத்தப்பட்டுள்ளன என்றும், ஒரே குழுவே இதனை நடத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகத் தலைவர்கள் கண்டனம்

சிறிலங்காவில் இன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு, பெருந்தொகையானோர் காயமடைந்த சம்பவத்தை உலகத் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சிறிலங்காவுக்கு உதவத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

றோமில் இன்று நடந்த உயிர்த்த ஞாயிறு ஆராதனையின் போது, இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த பாப்பரசர் பிரான்சிஸ், பாதிக்கப்பட்டவர்களுக்காக இரங்கல் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இந்த மோசமான தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர்.

அவசர அமைச்சரவைக் கூட்டம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.  நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயவே இந்த அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை பாதுகாப்பு அமைச்சில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் கூட்டப்பட்டு நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அவசரகாலச்சட்டம்?

அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

நாளை காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை நடத்திய பின்னரே, அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதா என்று முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அணைக்கட்டுக்கு பாதுகாப்பு

தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு உடவளவ – தனமல்வில அணைக்கட்டு வீதி தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன

அனைத்துப் பல்கலைக்கழகங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விடுமுறை அறிவிப்பு

சிறிலங்காவில் நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு விடுமுறை நாட்களாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், நாளை இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாகவிருந்த பாடசாலைகளுக்கான விடுமுறை, புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *