மேலும்

பலாலியில் இருந்து அவுஸ்ரேலியா, ஐரோப்பா வரை விமான சேவை

பலாலி விமான நிலையத்தை 20 பில்லியன் ரூபா செலவில் அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏ-320, ஏ—321 விமானங்கள் பயன்படுத்தக் கூடிய வகையில், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றராக விரிவாக்கப்படும்.

இதன்மூலம், இந்தியா, அவுஸ்ரேலியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 7200 கி.மீ சுற்றுவட்டத்துக்குள் இருக்கும் நாடுகளுக்கான நேரடி விமான சேவைகளை இங்கிருந்த நடத்த முடியும்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, ஓடுபாதை அபிவிருத்தியை முன்னுரிமை கொடுத்து முதற்கட்டமாக மேற்கொள்ளுமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

அருகில் உள்ள கட்டடங்களை தற்காலிகமாக புறப்படுகை மற்றும் வருகை முனையங்களாகப் பயன்படுத்தலாம் என்றும், அவ்வாறான நடைமுறை பல நாடுகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிரந்தர முனைய கட்டடங்களை இரண்டாவது கட்ட அபிவிருத்திப் பணியின் போது கட்ட முடியும் என்றும்,  முதலில் விமான நிலையம் கணிசமான விமானப் போக்குவரத்தை ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் அபிவிருத்தியில் அரசாங்கம் உயர் முன்னுரிமை கொடுப்பதாகவும், குடாநாட்டின் அனைத்துலக விமான நிலையம் பிராந்தியத்தில் பாரிய பொருளாதார எழுச்சியை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்போது விமான நிலையத்துக்கான மின்சாரம் , குடிநீர் வசதிகள், வீதி, எரிபொருள் களஞ்சியப்படுத்தல் வசதிகள் தொடர்பாகவும் நீண்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம், வடக்கிலுள்ள மக்களுக்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கும் என்றும்,  வணிக மற்றும் தொழில் வாய்ப்புகள் கிட்டும் என்றும், சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *