மேலும்

புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெற்ற ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பேணப்பட்டு வந்த 400 இராஜதந்திர கோப்புகளை அழித்திருப்பதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஒப்புக்கொண்டுள்ளது.

இதன் மூலம், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வரலாற்றைச் சிதைத்துள்ளதாக, லண்டனில் இருந்து வெளியாகும், The  Morning Star  நாளிதழ் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஏற்கனவே ஒப்புக்கொண்டதை விட இரண்டு மடங்கு கோப்புகளை, அழித்திருப்பதாக,  தகவல் சுதந்திர கோரிக்கை மூலம், The  Morning Star  கண்டறிந்துள்ளது.

தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக எப்படி போரிடுவது என்று சிறிலங்கா உளவுப் பிரிவு மற்றும் கொமாண்டோக்களுக்கு, பிரித்தானியாவின் MI5  மற்றும், SAS பிரிவினர் ஆலோசனை வழங்கியது தொடர்பாக, 1970களின் பிற்பகுதியில் இருந்து,  பேணப்பட்டு வந்த, 195 கோப்புகள் அழிக்கப்பட்டு விட்டதாக, கடந்த ஆண்டு, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் கூறியிருந்தது.

இந்தநிலையில், The Star  தற்போது வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, 1980களின் தொடக்கத்தில் இருந்து, பேணப்பட்டு வந்த, மேலும் 177 கோப்புகளை இராஜதந்திரிகள் அழித்துள்ளனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், அழிக்கப்பட்ட மொத்த கோப்புகளின் எண்ணிக்கை 372 ஆக அதிகரித்துள்ளது.

அழிக்கப்பட்ட கோப்புகளின் பெயர்கள் மாத்திரமே தப்பியுள்ளன. அவற்றில் பல, ஆயுத விற்பனையுடன் தொடர்புடையவையாகும்.

இதனைக் கண்டித்துள்ள, ஆயுத விற்பனைக்கு எதிராக பரப்புரை அமைப்பு சிறிலங்காவில்  இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தது தொடர்பான கோப்புகளை அழிப்பதற்கு வெளிவிவகாரப் பணியகம் அனுமதிக்க முடியாது என்று, கூறியுள்ளது.

“சிறிலங்காவில் நடந்த மோதல், பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.  இந்தப் போரில் பிரித்தானியாவின் பங்கு,  அரசாங்கத்திற்கு சங்கடமாக இருக்கலாம், ஆனால் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என்றால் அது முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும்.” என்று ஆயுத விற்பனைக்கு எதிராக பரப்புரை அமைப்பின் பேச்சாளர் அன்ட்ரூ சிமித், தெரிவித்துள்ளார்.

1980களில் சிறிலங்காவின் வலதுசாரி அதிபருக்கு பிரித்தானியா ஆயுதங்களைக் கொடுத்ததுடன், உயர்மட்டத்துக்கு ஆலோசனைகளையும் வழங்கியது.

1984இல், சிறிலங்கா படையினர் தமிழ்ப் பொதுமக்களைப் படுகொலை செய்த சில வாரங்களுக்குப் பின்னர், அந்த நாட்டின் பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல பெல்பாஸ்டுக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதையும், The Star வெளிப்படுத்தியுள்ளது.

இதன்போது, ஜெனரல் ஆட்டிக்கல, றோயல் உல்ஸ்டர்  கொன்ஸ்டபுலறி எனப்படும் வட அயர்லாந்தின் காவல்துறை  தலைவருடன் உணவருந்தியதுடன், கிளர்ச்சி முறியடிப்பு உத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார்.

“வட அயர்லாந்தின் இராணுவப் பிரச்சினை தொடர்பான சிறிலங்காவின் ஆர்வம்” என்ற தலைப்பிடப்பட்ட கோப்பு, வெளிவிவகாரப் பணியகத்தினால் அழிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்த இரகசிய உறவு தொடர்பான  முழு விபரங்களும் தெரியவராது.

வரலாற்று ஆவணங்களை அனைத்து அரசு துறைகளும் பாதுகாக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய ஆவணக் காப்பகத்தில் பொதுமக்களுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்ய வேண்டும். ஆனால் இந்தக் கோப்புகள் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே, வெளிவிவகாரப் பணியகம் அவற்றை அழித்திருக்கிறது.

கென்யாவில் காலனித்துவத்துக்கு எதிரான Mau Mau  செயற்பாட்டாளர்கள் பிரித்தானியாவினால் துன்புறுத்தப்பட்டமை தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டமைக்காக  வரலாற்றாசிரியர்களிடம்  பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் மன்னிப்புக் கோரிய சில வாரங்களுக்குப் பின்னர், 2014இல் சிறிலங்கா தொடர்பான கோப்புகள்  அழிக்கப்பட்டதாக The Morning Star கண்டறிந்துள்ளது.

1980களின் நடுப்பகுதிக்குப் பின்னரான சிறிலங்கா தொடர்பான 40 க்கும் மேற்பட்ட கோப்புகளை அழிக்க இரகசிய திட்டங்களை இப்போது இராஜதந்திரிகள் தயாரித்துள்ளனர் என்பதை, எம்மால் வெளிப்படுத்த முடியும்.

இந்த கோப்புகள் அரசியல் புகலிட விண்ணப்பங்கள், சிறிலங்கா படையினருக்கு பிரித்தானியாவில் அளிக்கப்பட்ட பயிற்சிகள்,  மற்றும் ஒன்பது பகுதிகளை உள்ளடக்கிய ஆயுத விற்பனைகள் தொடர்பான விபரங்களைக் கொண்டவையாகும்.

கென்ற் பல்கலைக்கழகத்தின்  சிறிலங்கா தொடர்பான நிபுணரான கலாநிதி Rachel Seoighe எஞ்சியுள்ள கோப்புகளை அரசாங்கத்திடம் இருந்து மீட்க முயற்சித்து வருகிறார்.

ஆரம்பத்தில் நினைத்ததை விட மிகப்பெரிய அளவில் கோப்புகளை அழித்தல் நடக்கிறது. அவர்கள் வரலாற்றை சிதைக்கிறார்கள் என்று கலாநிதி Rachel Seoighe எச்சரித்துள்ளார்.

எஞ்சியுள்ள கோப்புகளை வெளிப்படுத்துமாறு, தாம் விடுத்த தகவல் சுதந்திரக் கோரிக்கைகளை இராஜதந்திரிகள் நிராகரித்துள்ளனர் என்றும், இதனால் தகவல் ஆணைய கண்காணிப்பு அமைப்பிடம் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“போரில் பிரித்தானிய அரசாங்கத்தின் பங்கு தொடர்பாக,   குறிப்பாக சிறிலங்கா படைகளுக்கு ஆயுதமளித்தல் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது குறித்து இன்னும் முழுமையாக அறியப்படவில்லை.  அதனால்தான் அந்தக் காலத்திலிருந்த கோப்புகளை அழிக்க ஆர்வம் காட்டப்படுகிறது. கோப்புகளை அழிப்பதற்கு அவசரப்படுவது சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது ”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆவணங்களை அழிப்பதன் மூலம் வரலாற்றை திருத்தி எழுத நாம் அனுமதிக்க முடியாது என்றும், கலாநிதி Rachel Seoighe கூறினார்.

நாளை வரை இதுபற்றிக் கருத்து கூற முடியாது என்று பிரித்தானியா வெளிவிவகாரப் பணியகம் The Star நாளிதழுக்கு தெரிவித்துள்ளது.

மொழியாக்கம் – கார்வண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *