மேலும்

48 மணி நேரத்துக்குள் ‘ஆவா’வுக்கு ஆப்பு வைப்போம் – சிறிலங்கா படைத் தளபதி எச்சரிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை  அடங்குவதற்கு சிறிலங்கா அதிபரிடன் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்தால், 48 மணி நேரத்துக்குள் ஆயுதக் குழுக்களை அடக்கிவிட முடியும் என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி பலாலியில் உள்ள படைத தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”தற்போது சட்டம் ஒழுங்கு என்பன காவல்துறையிடம் உள்ளன. அதனால் நாம் அதில் தலையிடுவதில்லை.

யாழ்ப்பாணத்தில், ஆவா குழு போன்ற குழுக்களை அடக்குவது எமக்கு பெரிய சவால் இல்லை. 48 மணிநேரத்துக்குள் அவற்றை அடக்கி விடுவோம்.

காவல்துறையினர் தம்மால் அவர்களை அடக்க முடியாது என இராணுவத்தின் உதவியைக் கோரினால், உதவுவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

தற்போதைய நிலையில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களை சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தால், தமிழ் இளைஞர்களை இராணுவம் கைது செய்கிறது என குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள். அதனால் பொறுமையாக இருக்கிறோம்.

அதற்காக, தொடர்ந்தும்  இத்தகைய வன்முறைச் சம்பவங்களை பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

யாழ்ப்பாணத்தில்  நடக்கும் வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர சிறிலங்கா அதிபர் இராணுவத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும். அந்த அனுமதிக்காக காத்திருக்கிறோம்.

யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்,  2880.08 ஏக்கர் காணிகளே உள்ளன.

மக்களுக்கு சொந்தமான இந்தக் காணிகளை மீளவும் வழங்குவதில் இராணுவம் உறுதியாக இருக்கிறது .

யாழ். மாவட்டத்தில், இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிடம் தற்போது  4512.82 ஏக்கர் காணிகள் உள்ளன. இது யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 1.39 வீதமாகும்.

வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள், பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படையின் கீழ் உள்ள 996.74 ஏக்கர் காணிகள், இராணுவத்திடம் 2032.19 ஏக்கர் காணிகளையும் சேர்த்து 3028.93 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது.

இராணுவத்திடம் உள்ள 500 ஏக்கர்  காணியை மக்களிடம் மீளக் கையளிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களின் காணிகளை மக்களிடம் மீள வழங்குவதில் இராணுவம் உறுதியாக உள்ளது.

அதேசமயம் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பிலும் இராணுவம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இப்போது செயற்படும் சிறு வன்முறைக் குழுக்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா என்பது குறித்தும் இராணுவம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

யாழ்.மாவட்டத்தில் பரவலாக உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஆனால் அவற்றை அகற்றி வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான நிதி எமக்கு தேவை.

அது குறித்து நாங்கள் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.  எமக்கு தேவையான நிதி கிடைக்குமானால், மக்களின்  காணிகளில் இருந்து இராணுவயாம் வெளியேறும்.

யாழ்ப்பாணம்  கோட்டை பகுதியை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழ்ப்பாணத்தில்  உள்ள இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டு ஏனைய பகுதிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க தயாராக உள்ளோம்.

இது தொடர்பாக சிறிலங்கா அதிபர்  , பிரதமர் ஆகியோரிடமும்,  தொல்லியல் திணைக்களத்திடமும்  கோரிக்கைகளை விடுத்துள்ளோம். அதற்கு சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *