கொழும்பில் பலம் காட்ட முனையும் கூட்டு எதிரணி- முறியடிப்பு முயற்சியில் அரசு தீவிரம்
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் 5ஆம் நாள் கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி தயாராகி வரும் நிலையில், இந்தப் பேரணியை முறியடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கமும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொழும்பு நகருக்குள் பெருந்தொகையான மக்களை குவித்து, அரசாங்கத்தை ஆட்டம் காண வைக்கும் நோக்கில், பாரிய பேரணி ஒன்றை கூட்டு எதிரணி எதிர்வரும் 5ஆம் நாள் நடத்துவதற்கு திட்டமிட்டு, அதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது.
எனினும், இந்தப் பேரணி எங்கு நடைபெறவுள்ளது என்பதை கூட்டு எதிரணி இன்னமும் வெளிப்படுத்தவில்லை.
முன்னரே பேரணி நடக்கும் இடத்தை அறிவித்தால், அரசாங்கம் நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்று அதனைத் தடுத்து விடும் என்பதால், பேரணி நடக்கும் இடம் பற்றிய இடத்தை இரகசியமாக வைத்திருப்பதாகவும், முதல் நாளே அதுபற்றி அறிவிக்கப்படும் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
ஐந்து இடங்கள் பேரணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் எங்கு பேரணி நடக்கும் என்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எனினும், காலிமுகத் திடலிலேயே இந்தப் பேரணி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
அதேவேளை, இந்தப் பேரணியில் பெருமளவு மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, மேல் மாகாணத்தில் உள்ள தனியார் பேருந்துகள் சிறப்பு பயணங்களை மேற்கொள்வதற்கு நேற்றுத் தொடக்கம், எதிர்வரும் 8ஆம் நாள் வரை மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை, தடை விதித்துள்ளது.
தனியார் பேருந்துகள், ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட வழித்தடங்களில் மாத்திரம் பயணத்தில் ஈடுபட வேண்டும் என்றும், இதனை மீறும் பேருந்துகளின் அனுமதிகள் ரத்துச் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கூட்டு எதிரணிக்கு ஆதரவு அளிக்கும், 3475 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்- ஒவ்வொருவரும் தலா ஒரு பேருந்தில் ஆதரவாளர்களைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக, பேரணி ஏற்பாட்டாளர்களின் ஊடகப் பேச்சாளரான சஞ்சீவ எதிரிமன்ன தெரிவித்துள்ளார்.