மேலும்

சீனாவில் அச்சிடப்படும் சிறிலங்காவின் நாணயத் தாள்கள்

சிறிலங்கா உள்ளிட்ட பல நாடுகளின் நாணயத் தாள்களை சீனாவே அச்சிடுவதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏனைய நாடுகளின் பொருளாதாரங்களில் செல்வாக்கைக் கட்டியெழுப்பும் வகையில், பாரியளவில் வெளிநாட்டு நாணயத்தாள்களை சீனா அச்சிடுகிறது.

சீனாவில் உள்ள நாணயத் தாள் அச்சிடும் தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அண்மைக்காலம் வரை சீனா வெளிநாட்டு நாணயத்தாள்களை அச்சிடவில்லை என்று சீனாவின் வங்கி நாணயத் தாள்கள்  அச்சிடும் நிறுவனத்தின் தலைவரான லியூ கியூஷேங், தெரிவித்துள்ளார்.

அணை மற்றும் பாதை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நேபாள நாணயத் தாள்களை அச்சிட ஆரம்பித்தது என்று சைனா பினான்ஸ் இதழில் லியூ எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பின்னர், தாய்லாந்து, பங்களாதேஷ், சிறிலங்கா, மலேசியா, இந்தியா, பிரேசில், போலந்து உள்ளிட்ட நாடுகளின் நாணயத் தாள்களை அச்சிடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நேபாளம், 1000 ரூபா மதிப்புள்ள 200 மில்லியன் நாணயத் தாள்களை அச்சிடும் பணியை சீன நிறுவனத்திடம் வழங்கியது. கடந்த ஆண்டு முதல் தொகுதி நாணயத் தாள்கள் நேபாளத்துக்கு வழங்கப்பட்டன.

சீனாவில் நாணயத் தாள்களை அச்சிடும் செலவு குறைவானது என்று நேபாள ராஷ்ட்ரா வங்கியின் பணிப்பாளர் புகுபன் கடெல் தெரிவித்தார்.

இன்னொரு நாட்டில் முன்னர் அச்சிடப்பட்டதை விட தரம் நன்றாக இருக்கிறது. இதற்காக முன்னர் கொடுத்த தொகையை விட பாதியே செலவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்தியாவின் நாணயத் தாள்கள் சீனாவில் அச்சிடப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்திய மத்திய நிதி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாணயத் தாள்கள் சீனாவிடம் அச்சிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்திய நாணயத் தாள்களை அச்சிடும் வேலை சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றது என்று இந்திய நிதியமைச்சின் பொருளாதார விவகார திணைக்களத்தின் செயலரை சுபாஸ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

இந்திய நாணயத் தாள்கள் இந்திய அரசாங்கத்தினால், றிசேவ் வங்கியின் அச்சகங்களிலேயே அச்சிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *