மேலும்

தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா?

அண்மைய காலங்களில் சர்வதேச அளவில் சனநாயகம் வீழ்ச்சி கண்டு வருவது குறித்து தாராள சனநாயக சித்தாந்த ஆதரவாளர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். அரசியல் சுதந்திரம், சனநாயகம், திறந்த சந்தை, திறந்த சமூக அமைப்பு என கவலையற்ற நிலையில் இனிமேல் மேலைத்தேய தாராள சனநாயகம் வாழ்ந்திருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது.

இந்த அம்மணமான உண்மையை மறுக்க முடியாதுள்ளது என்ற சர்வதேச சனநாயக நெறிமுறைகள் குறித்த கவலையை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

கடந்த ஜூன் 22ஆம் திகதி டென்மார்க் தலைநகரான கொப்பனேகனிலே ஒரு ஆய்வு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு முன்னைய நாள் டென்மார்க் பிரதமரும் முன்னைநாள் நேட்டோ பொதுச்செயலருமான Anders Fogh Rasmussen தலைமையில்,  அமெரிக்க முன்னைநாள் பதில் அதிபர் Joseph Biden, கனேடிய முன்னைநாள் பிரதமர் Stephen Harper, ஸ்பானிய முன்னைநாள் பிரதமர் Jose Maria Aznar என மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சனநாய சார்பு மாநாட்டில் உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் எழுச்சிகண்டு வரும் சனநாயகத்தின் வீழ்ச்சி குறித்து ஆராயப்பட்டது. முன்பு ஒருபோதும் இல்லாத அளவு தாராள சனநாயக நாடுகளிலும் கூட சனநாயகம் மக்களுக்கானஅடிப்படை பாதுகாப்பை கொடுக்கவில்லை என்பது இவர்களது பார்வையாகும்.

மேலும் மேலைத்தேய சனநாயகத்தின்  சர்வதேசஅத்திவாரம் எதேச்சாதிகாரத்தாலும் தாராளப் போக்கு அற்ற அரசுகளாலும் சனநாயக நெறிகளின் நிழலிலே லாவகமாக கையாளப்பட்டு வருகிறது. தனிப்பட்ட அரசியல் இலாபம் தேடும், போலித்தனமான தேசியவாத போக்குகளினால் அத்திலாந்திக் கரை நாடுகளின் கூட்டு இன்று கேள்விக்கிடமானதாக ஆக்கப்பட்டுள்ளதாக அம் மாநாட்டில் அறிவித்தனர்.

இத்தகைய ஆய்வுகள் பல்வேறு சர்வதேச ஆய்வு கூட்டங்களிலும் இன்றைய காலப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்டு வருவது கவனிக்கத்தக்கதாகும்.

அண்மையில் சீன தலைவர், வாழ்நாள் முழுவதும் தாமே சீனாவின் தலைவராக இருக்கக்கூடிய வலுவை சீன கம்யுனிச கட்சியின் தலைமையில் பெற்று கொண்டார். அதுமட்டுமல்லாது, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின் மீண்டும் ஒருமுறை அதிபராக தெரிவு செய்யப்பட்டார். இவை மட்டும் இத்தகைய ஆய்வுகளிற்கு காரணமாக அமையவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து பிரிந்து போவதன் ஊடாக ஐரோப்பிய நாடுகளின் ஒற்றமை சிதைவுறுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் தற்காப்பு பொருளாதார போக்கும் அவரது அதிபர் தெரிவில் ரஷ்ய இணையதள தொழில்நுட்ப செல்வாக்கு  இணைந்திருப்பதான பார்வையும் கவனிக்கத்தக்கதாகும்.

மேலும் மேலைத்தேய ஆய்வாளர்களின் பார்வையில் அமெரிக்கா பாதுகாப்பு மற்றும் பொருளாதார முதன்மை என்ற பெருமையை இழந்து நிற்கிறது,

இதற்கும் மேலாக மத்திய ஐரோப்பிய நாடுகளிலும் தேசியவாதம், சனரஞ்சக வாதம், இனவாதம் என பல்வேறு சனநாயகத்திற்கு எதிரான சக்திகள் எழுச்சி கண்டுவருவது கணிப்பிடப்பட்டுள்ளது. இது Xenophobia எனப்படும், இடம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டவர்கள் மீதான ஒரு பயம் தான் என்ற கருத்து ஆய்வாளர்கள் மத்தியில் பொதுவாக உள்ளது.

ஆசிய, ஆபிரிக்க,மத்திய கிழக்கு, கரீபியன் நாடுகளில் இடம்பெற்ற யுத்த நிலைமைகள் காரணமாக இடப்பெயர்வை சந்தித்த மக்கள் மேலைநாடுகளை நோக்கி புலம்பெயர்ந்தனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் உள்ளுர் தேசியவாத சக்திகள் இதனை சாதகமாக பயன்படுத்தி அரசியல் இலாபம்பெறும் போக்கில் கையாளுகின்றன..

தமது தனித்துவமான பொருளாதார கலாச்சார வரலாற்றில் புதிய இனங்களின் தலையீடுகள் குறித்து தம்மை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு உள்ளுர்வாசிகள் தேசியவாதத்தையும் சனரஞ்சகவாதத்தையும், இனவாதத்தையும் தம்மைப் பாதுகாக்கும் வழிமுறையாக பார்க்கின்றனர்.

உதாரணமாக ருமேனியா, ஹங்கேரி, போலந்து போன்ற நாடுகளில் அண்மைக்காலத்தில் தாராளமற்ற சனநாயகத்தின் எழுச்சியும் எதேச்சாதிகார அரசியலின் வளர்ச்சியும் முக்கியமாக கவனத்தில் எடுத்து கொள்ளப்படுகிறது.

அதேபோலமெக்சிக்கர்களின் இடப்பெயர்வை முன்வைத்து அதிபர் ட்ரம்ப் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் வரவேற்பை பெற்று கொண்டார்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் இரண்டாம் உலகப்போரின் பின்பு ஜேர்மனியப் நாடாளுமன்றத்தில் Bundesshaus அதீத தேசியவாதிகள் தமது நிலையை எடுத்துள்ளனர்.

இத்தகைய நிலையானது, அரச அதிகாரத்தில் உயர்மட்ட ஆட்சி குழுக்களும் மோசடி ஆட்சியும் ஆதிக்கம் செலுத்தும் நிலையை உருவாக்கி வருகிறது. மேலும் சனநாயக வழிமுறைகள் மூலம் தமது குரல்கள் வெளிக்கொண்டு வரப்படும் என்பதில் மக்கள் நம்பிக்கை குறைந்து வருவது கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

மேலைத்தேயம் முதலாளித்துவ தாராள சனநாயக சித்தாந்த நம்பிக்கையை பாதுகாக்க எத்தனித்து நிற்கும் அதேவேளை, கீழைத்தேய ஆய்வாளர்கள் மேற்கு நாடுகள் தமது உலக ஒழுங்கை கையாளும் வகையிலான முதன்மையை ஏற்கனவே இழந்து விட்டன என்ற பார்வையை கொண்டுள்ளனர்.

பனிப்போர் முடிவிலிருந்து 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்காலம் வரை இருந்த அமெரிக்க அரசியல் பொருளாதார பலம் இன்றைய காலப்பகுதியில் இல்லை என்பது இவர்களது விவாதமாகும்.  பனிப்போர் முடிவில் மிகப்பெரும் வெற்றிப் பெருமிதம் கொண்ட மேற்கு நாடுகள் இந்திய -சீன வளர்ச்சியை கண்டுகொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

2001 ஆண்டில் சீனாவின் உலக வர்த்தக அமைப்புடன் இணைந்து கொண்ட பொழுது 800 மில்லியன் புதிய தொழிலாளர்கள் மேற்கு நாடுகளின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் புகுத்தப்பட்டனர்.

இதனால் மேலை நாடுகளில் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டதன் காரணத்தாலேயே தேசியவாத, சனரஞ்சகவாத, இனவாத தலைமைகளின் விவாதங்களை மேற்கு நாடுகளில் உள்ள மக்கள் கிரகிக்க வேண்டிய தன்மை ஏற்பட்டதாக கிழக்கு நாடுகளின் சார்பான ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உலக வர்த்தக அமைப்புடன் சீனா இணைந்தமை சர்வதேச வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருந்த போதிலும்- சீன பொருட்கள் மேற்கு நாடுகளில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரின் வருமானத்திற்கு ஏற்ற வகையில் வாழ்க்கைத்தரத்தை  கொண்டு செல்ல கூடியதாக இருந்தது.

ஆனால் சுமார் நாற்பது வருடங்களாக எந்தவித முன்னேற்றமும் அற்ற வாழ்க்கையை கொண்டிருப்பது முக்கியமானதாகும். இந்த நிலை உலகில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான காரணமாக பார்க்கப்படுகிறது

டென்மார்க் தலைநகரான கொப்பனேகனிலே இடம்பெற்ற ஆய்வு மாநாட்டின் அடிப்படைகளான தாராள சனநாயக நெறிமுறைகளின் வீழ்ச்சியும், கீழைத்தேய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், அவற்றின் மேலைத்தேய சர்வதேச அரசியல் சட்டதிட்டங்களை பின்பற்றும் தன்மை (play within rule) என்னும் பதத்திற்கு ஏற்ப சீன, இந்திய நாடுகள் வரைமுறைகளுக்குள் வளர்ச்சி என்பது மேலும் மேலைத்தேய தலைமைத்துவத்திற்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்பது கீழைத்தேய ஆய்வாளர்களது பார்வையாக உள்ளது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில்  இன்னும் பத்து வருடங்களுக்குள் சீனா உலகின் முதலாவது வல்லரசாக மாறும்நிலை ஏற்படும் பொழுது இந்தியாவின் முக்கியத்துவம் மிக வலிமையானதாக மாறும் என்று ஆய்வாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

கீழைத்தேய, மேலைத்தேய இழுபறிக்கு மத்தியில், சீன – அமெரிக்க போட்டி மிக வலிமையானதொரு நிலையை எட்டும்பொழுது இந்தியாவின் மேலைத்தேய போக்கு சீனாவுக்கு மேலான அமெரிக்க யதார்த்தவாத சித்தாந்தத்தின் அடிப்படையில் செயற்பட முற்படுமாயின் அபாயகரமான பொறிக்குள் உலகம் சிக்குண்டு போவது தவிர்க்க முடியாததாகி விடும்.

-‘புதினப்பலகை’க்காக லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *