மேலும்

தலைமன்னார் இறங்குதுறையை ஆய்வு செய்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர்

சிறிலங்காவுக்கான இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் தலைமன்னார் இறங்குதுறையைப் பார்வையிட்டு, சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் நேற்றுமுன்தினம், சிறிலங்கா கடற்படையின், வட மத்திய தலைமையகத்துக்குச் சென்றார்.

அங்கு, வடமத்திய கடற்படைத் தலைமையக தளபதி றியர் அட்மிரல் முடித்த கமகே மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

இதையடுத்து, கப்டன் அசோக் ராவ், சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரிகளுடன், தலைமன்னார் இறங்குதுறையைப் பார்வையிட்டார்.

எனினும், தலைமன்னார் இறங்குதுறையின் நிலைமைகளை இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பார்வையிட்டமைக்கான காரணங்கள் இன்னமும் தெரியவரவில்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது, இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டது.

தலைமன்னார் இறங்குதுறை சேதமடைந்த நிலையில் உள்ளதால், அதனைப் புனரமைக்க இந்தியா உதவும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதன் பின்னர் இந்திய அதிகாரிகள் குழு தலைமன்னார் இறங்குதுறைக்குச் சென்று ஆய்வுகளைச் செய்த போதும், புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்தநிலையில், இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் தலைமன்னார் இறங்குதுறையை ஆய்வு செய்திருப்பது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *