மேலும்

ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையை விட்டு வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இதையடுத்து, சிறிலங்காவின் உயர்மட்ட அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய போதே அமெரிக்கத் தூதுவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அனைத்து இலங்கையர்களுக்கும், நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதாக, அனைத்துலக சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து காப்பாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்.

சிறிலங்காவும் அமெரிக்காவும், 2015 ஆம் ஆண்டின் 30/1 தீர்மானம் மற்றும் 2017ஆம் ஆண்டின் 34/1 தீர்மானம் ஆகியவற்றில் இணை அனுசரணை வழங்கியிருந்தன.

சிறிலங்கா இந்த மிகமுக்கியமான வாக்குறுதிகள், கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முழுமையான ஆதரவை அளிக்கும்.

இந்த அனைத்துலக கடப்பாடுகளை நிறைவேற்றுவதை நோக்கிய சிறிலங்காவின் முன்னேற்றம், இரண்டு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலமடைவதற்கும், உலகெங்கும் நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடன் இணைந்து கொள்வதற்கான ஆற்றலையும் சிறிலங்காவுக்கு வழங்கும்.

சிறிலங்காவின் முன்னேற்றங்களை நாங்கள் உன்னிப்பாக கண்காணிப்போம்.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை எடுக்கும்போது, அமெரிக்கா அதனை ஆதரிக்கும். அத்துடன்,  இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அது உதவும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *