மேலும்

கோத்தாவை நிறுத்தக் கூடாது – மகிந்தவிடம் அமெரிக்கத் தூதுவர்

அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ச களமிறக்கப்படக் கூடாது என்றும் அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார்.

நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும், காலைக்கதிர் நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் நேற்றுமுன்தினம் இரவு மகிந்த ராஜபக்சவை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின் போதே, மேற்குலகத்தின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கத் தூதுவர் வெளிப்படையாக கூறினார் என்று அறியப்படுகிறது.

கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை மேற்குலகம் சாதகமாக நோக்காது. அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனநாயக அரசியலுக்குப் பொருத்தமான- அனுபவமும், அரசியல் முதிர்ச்சியும் உள்ள ஒருவரே நாட்டின் தலைவராக வேண்டும் என்ற தொனியில், அவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

அமெரிக்கத் தூதுவரின் இந்த நிலைப்பாடு, ராஜபக்ச குடும்பத்துக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், காலைக்கதிர் நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *