மேலும்

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட மங்கள சமரவீர இணக்கம்

முன்னாள் போராளிகளின் மீள்குடியமர்வு, அவர்களுக்கான இலகு கடன்கள், வாழ்வாதார உதவித் திட்டங்களை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

2018 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களை வடக்கில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டது.

வடக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 1000 மில்லியன் ரூபாவை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்று இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதில் நிதியமைச்சின் அதிகாரிகள், மத்திய வங்கி அதிகாரிகள், வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களின் செயலர்களும் கலந்து கொண்டனர்.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில், முன்னாள் போராளிகளின் மீள்குடியமர்வு,  அவர்களின் வணிக முயற்சிகளுக்கான இலகு கடன்கள், வாழ்வாதார வாய்ப்புகளுக்கான உதவிகளை வழங்குவதற்கும் வழிகள் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டங்களை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து முன்னெடுக்குமாறு, இதன் போது வடக்கு மாகாண முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக வடக்கு மாகாணசபையின் குழு ஒன்றை நியமிக்குமாறு முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்ட மங்கள சமரவீர, தமது அமைச்சுடன் அவர்களை இணைந்து செயற்படுமாறும் தெரிவித்தார்.

அதேவேளை, வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணத்தில் வணிகர் கழகப் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், சிறிய நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுடனும், சிறிலங்கா நிதியமைச்சர் தனித்தனியாக கலந்துரையாடல்களை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *