மேலும்

ஏனைய பகுதிகளுக்கும் வன்முறை பரவும் ஆபத்து – பதற்றத்தில் முஸ்லிம்கள்

muslim-shop-fire (1)கண்டியில் ஏற்பட்டுள்ள இனமோதல்கள் சிறிலங்காவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக் கூடிய ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னதாக, அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்பட்டு பள்ளிவாசல் ஒன்றும் வாணிப நிலையங்களும் சேதப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டியில் புதிய வன்முறைகள் வெடித்துள்ளன. muslim-shop-fire (2)

கண்டி மாவட்டத்தில் திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவில் இருந்து இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நேற்று பிற்பகல் தீவிரமடைந்தது.

இதையடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, நேற்று மாலை காவல்துறை ஊரடங்குச் சட்டம் கண்டி மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஏனைய பகுதிகளுக்கும் வன்முறைகள் பரவக் கூடிய ஆபத்து இருந்ததாலேயே உடனடியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளிலும், இன ரீதியான மோதல்களைத் தூண்டும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிகிறது.

நேற்று கென்கல்ல பகுதியில் முஸ்லிம் ஒருவரின் வாணிப நிலையம் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்ட போதிலும், அது வெடிக்கவில்லை. எனினும், வாணிப நிலையம் மீது கற்களை வீசித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் முஸ்லிம்கள் மத்தியில் ஒருவித பதற்றமான நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஏனைய பகுதிகளுக்கும் வன்முறை பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தையும் இன்று மூடுமாறு கல்வி அமைச்சர்  அகில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *