மேலும்

தேர்தல் வன்முறைகளை தடுக்க வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு

sri lanka policeவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், வேட்பாளர்களின் செயலகங்களும் தாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் நாள் நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன.

வடக்கு, கிழக்கில், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருவதுடன், வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள், வடக்கில் அதிகம் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, கிழக்கில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும், தேர்தல் செயலகங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கில், வடக்கு, கிழக்கில் குறிப்பாக, யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேலதிகமாக சிறிலங்கா காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் சட்டங்களை மீறுவோர் பிணையில் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *