மேலும்

மைத்திரியின் சவாலுக்குச் சவால் – தேர்தலுக்கு முன் நாடாளுமன்றை கூட்டுகிறார் ரணில்

parliamentமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக, உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

பிணை முறி மோசடி குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும், முன்னைய ஆட்சிக்கால மோசடிகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியனவற்றின் மீது எதிர்வரும் பெப்ரவரி 20ஆம், 21ஆம் நாள்கள் விவாதம் நடத்துவதென் நாடாளுமன்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேன, ஐதேகவும், கூட்டு எதிரணியும் இணைந்து ஆணைக்குழு அறிக்கைகள் குறித்து விவாதம் நடத்துவதை பிற்போட்டுள்ளதாகவும், உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக விவாதம் நடத்த தயாரா என்றும் சவால் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தெனியாயவில் நேற்று நடந்த பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா ரணில் விக்கிரமசிங்க, உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பிணைமுறி அறிக்கை குறித்து விவாதிக்கத் தயார் என்று அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 8ஆம் நாள் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகருக்கு தாம் நாளை திங்கட்கிழமை  அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

”எதிர்வரும் 8ஆம் நாள் விவாதம் நடத்துவதே பொருத்தமானது. அதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்கள்.

விவாதம் ஒரு நாளோ, பல நாட்களோ நடத்தப்படுவது பற்றி எனக்குப் பிரச்சினையில்லை.

யாராவது எனது வாயை வெட்டினாலும் கூட அதிகாரத்தில் இருப்பதற்காக பொய் பேசமாட்டேன்.

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரக் கூடிய சட்பூர்வ அதிகாரமுடைய ஒரே ஒருவர் நான் மட்டும் தான். சபாநாயகருக்குக் கூட அந்த அதிகாரம் இல்லை.

சபாநாயகரை வெள்ளிக்கிழமை சந்தித்தேன். அப்போது வரும் 8ஆம் நாள், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குக் கோரும் ஆவணங்களை திங்கட்கிழமை அனுப்புவதாக கூறியுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *