மேலும்

பொறுப்புக்கூறல், நல்லிணக்க விவகாரங்களில் சிறிலங்கா மீது அமெரிக்கா அதிருப்தி

cm-atulபொறுப்புக்கூறல், நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அமெரிக்க தூதுவர் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்றுமுன்தினம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்தபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், இது தொடர்பாகவும்,  உலக உணவு நிறுவனம் சிறிலங்காவுக்கான உதவியை நிறுத்தியுள்ளமை  தொடர்பாகவும், கலந்துரையாடுவதற்காக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பை சந்தித்திருந்தார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக, தகவல் வெளியிட்டுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

“எதிர்வரும் மார்ச் மாதம்  கூடவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா  குறித்தும் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. இது குறித்து நான் அவரிடம் வினவியிருந்தேன்.

எமக்கான தீர்வுகளை  பெற்றுத்தருவதாக அரசாங்கம் கொடுத்த  வாக்குறுதிகள் அனைத்துமே இன்று பொய்த்துப் போயுள்ளன.  ஆகவே அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து  அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என நான் தெரிவித்துள்ளேன்.

அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்களில் பின்வாங்குகின்றது.  எமக்கு இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமெரிக்க தூதுவர் என்னிடம் தெரிவித்தார்.

cm-atul

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர்,  நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என வாக்குறுதி வழங்கியிருந்தும், அவை இன்றும் வெறும் கதைகளாக  கடந்து செல்கின்றன.

இப்போது தேர்தல் ஒன்றை எதிர்பார்த்துள்ள நிலையில், பொறுப்புக்கூறல் விவகாரம் மேலும் தாமதமாகும். சில  முக்கிய விடயங்களில் கூட்டு அரசாங்கம் பின் நிற்பது  உகந்ததல்ல.

ஜனநாயக ரீதியில் அரசாங்கம் செயற்படும் என்ற நம்பிக்கைக்கு அமையவே சிறிலங்கா  அரசாங்கத்துடன் அமெரிக்கா இணைந்து செயற்படவும், பின்னின்று  உதவி செய்யவும் தீர்மானம் எடுத்தது.

இந்த அரசாங்கம் தாமாக முன்வந்து பல்வேறு விடயங்களில் தீர்வுகளை கொடுப்பதாக கூறியிருந்தது. எனினும் அனைத்துமே இன்று ஏமாற்றுக் கதைகளாக மாறியுள்ளன.

தாம் எதிர்பார்த்த எவையும் இன்னும் நடைபெறவில்லை என அமெரிக்க தூதுவர் தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தின் நகர்வுகளில் திருப்திகரமான செயற்பாடுகள் இல்லை. முன்னைய ஆட்சியின் கதைகளை கூறிக்கொண்டும் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவின் கதைகளை கூறிக்கொண்டும் முன்னெடுக்க வேண்டிய நல்லெண்ண நகர்வுகளை புறக்கணித்து வருகின்றனர்.

தமது கடமைகளை நிராகரிக்கும் செயற்பாடுகளாக நாம் இவற்றை கருதுகின்றோம்.  இதுவே எமக்குள்ள மிகப்பெரிய ஏமாற்றமாகும். ஆகவே  அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும்  அமெரிக்க தூதுவர் என்னிடம் குறிப்பிட்டார்.

உலக உணவு நிறுவனம், சிறிலங்கா சிறார்களுக்கு ஒதுக்கும் பாடசாலை மாணவர்களுக்கான  மதிய உணவுக்கான நிதி உதவியை  இந்த ஆண்டில் ஒதுக்கவில்லை. கடந்த மாதத்துடன் அவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

இது எமது மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எமது பிள்ளைகள் பாடசாலையில் வழங்கும் உணவுகளை நம்பி பாடசாலைகளுக்கு செல்கின்றனர். அரைவாசி பிள்ளைகளின் நிலைமை இவ்வாறாகவே உள்ளது.

ஆகவே மதிய உணவு திட்டமும் கைவிடப்பட்டால் எமது பிள்ளைகள் பாடசாலை செல்வதும் வெகுவாக குறைந்து விடும். இதனால் எமது சமூகத்தின் பிரச்சினைகள் அதிகரிக்கும்.

நான் இந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கடந்த மாதம் அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன்.

இதுகுறித்து இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்க தூதுவரிடம் வினவினேன். எனது கடிதத்தை உரிய இடத்திற்கு அனுப்பியதாகவும், அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடிதத்தை ஏற்றுகொண்ட போதிலும் 2018 ஆம் ஆண்டில் சிறிலங்காவுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் இந்த விவகாரத்தில் தாம் சற்று சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எமக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை தருகின்றது.  மாதாமாதம் ஏதேனும் வேலைத்திட்டங்கள் ஊடாக எமது மாணவர்களுக்கு உணவுக்கான நிதியினை வழங்க வாய்ப்புகள் உள்ளதா எனவும் நான் வினவினேன்.

எனினும் தீர்மானங்கள் எதையும் அவர்களால் முன்னெடுக்க முடியாத நிலைமை உள்ளது. ஆகவே மாகாணசபையில் இந்த விவகாரம் குறித்து நான் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

வரும் பிரச்சினைகளையும் நானே சமாளிக்கவும் வேண்டியுள்ளது. இதனால் எமது மாணவர்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *