மேலும்

கடன்பொறிகள் நிறைந்த சீனாவின் பட்டுப்பாதை

hambantota- chinese flag (1)சீனாவின் பட்டுப்பாதைகள் மற்றும் கரையோரப் பட்டுப் பாதைகள் போன்றன இதன் வர்த்தகப் பாதைகள் அமைந்துள்ள மத்திய ஆசியா மற்றும் இந்திய மாக்கடலிற்குக் குறுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. பட்டு என்பது சீனாவின் வர்த்தகச் செயற்பாட்டில் மிகச் சிறிய பங்கையே கொண்டுள்ள போதிலும் இது சீனாவின் அடிப்படை வர்த்தகச் செயற்பாடாகக் காணப்படுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

மிங் சக்கரவர்த்தி ஜொங்கில் நியமித்த மொங்கோலிய முஸ்லீம் பிரதானியான அட்மிரல் செங்க் ஹீயால் தலைமை தாங்கப்பட்ட சீனக் கடற்படைக் கப்பலே 1404 மற்றும் 1433 காலப்பகுதியில் முதன் முதலாக இந்திய மாக்கடலின் ஊடாக பட்டுப் பாதையை உருவாக்கியது.

குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா, சிறிலங்கா, கலிகட் போன்ற நாடுகளைச் சேர்ந்த   அரசர்கள் மற்றும் இளவரசர்களை சிறைப்பிடித்து சீனாவிற்குக் கொண்டு வருவதற்காக அட்மிரல் செங்க் இந்திய மாக்கடலின் ஊடாகக் கப்பல் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

சீனாவின் உள்நோக்கங்களைப் புரிந்து கொண்ட இந்தோனேசியா சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதைத் தவிர்த்து வருகிறது. ஆனால் இலங்கைத் தீவின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சீனா, சிறிலங்காவைத் தனது வலையில் விழுத்தியது.

1406ல் கலிகட்டுக்குப் பயணம் செய்த அட்மிரல் செங்க், முன்னர் இடம்பெற்ற பிரச்சினை ஒன்றுக்கு பழிக்குப் பழி தீர்க்கும் முகமாக 1411ல் மிகப் பெரிய இராணுவப் படையுடன் சிறிலங்காவை வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து சிறிலங்காவின் சில பகுதிகள் செங்கின் இராணுவத்தால் சூறையாடப்பட்டதுடன், அப்போது சிறிலங்காவை ஆட்சி செய்த வீர அழகேஸ்வர மன்னன் புத்தரின் புனித தந்தத்துடன் நன்ஜிங்கிக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த மன்னனுக்குப் பதிலாக சீனாவிற்குச் சார்பான பிறிதொருவர் மன்னனாக நியமிக்கப்பட்டார். இந்த ஆக்கிரமிப்புச் சம்பவம் இடம்பெற்று ஒரு சில ஆண்டுகளின் பின்னர் வீர அழகேஸ்வர மன்னன் மீண்டும் அவரது நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆனால் இவருடன் கொண்டு செல்லப்பட்ட புனித தந்தமானது ஆறு நூற்றாண்டுகளின் பின்னர் அதாவது 1960ல் அப்போதைய சீனப் பிரதமர் சூ என் லாயினால் சீனாவின் பாணியில் ‘நல்லெண்ண சமிக்கையாக’ சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்டது. வரலாற்று ரீதியாக நோக்கில், சீனாவின் வர்த்தகமானது பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் சுரண்டப்பட்டது.

இன்று கொழும்பில் சீனாவின் நிதியுதவி என்ற பெயரில் பல்வேறு கட்டுமான மற்றும் தொழிற்துறைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கொழும்பிலுள்ள காலி பிரதான வீதி சீனாவின் நிதியில் கட்டப்பட்டது.

இதேபோன்று 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான துறைமுக நகரானது சீனாவின் நிதியில் அமைக்கப்படுகிறது. இங்கே சொகுசுக் குடியிருப்புக்கள், சூதாட்ட விடுதிகள், பூங்கா, விடுதிகள், அலுவலகக் கட்டடங்கள் போன்ற பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் விரைவில் சிறிலங்காவின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும்.

ஏற்கனவே சீனாவிடமிருந்து பெற்ற ‘உதவியை’ மீண்டும் செலுத்த முடியாது திணறும் சிறிலங்காவிற்கு இது மேலும் நெருக்கடியைக் கொடுக்கும். இவ்வாறான கட்டுமாணங்கள் மற்றும் ‘உதவி’ மற்றும் இயற்கை வளங்களை சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் மற்றும் சீனத் துறைமுக பொறியியல் நிறுவனம் ஆகிய இரண்டும் அபகரித்து வருகின்றன.

hambantota- chinese flag (2)

இவ்விரு நிறுவனங்களும் இவற்றின் ஊழல் செயற்பாடுகளால் உலக வங்கியால் தடை செய்யப்பட்டுள்ளன. கொழும்பில் அமைக்கப்பட்ட கொள்கலன் முனையத் திட்டமானது மிகவும் திட்டமிடப்பட்ட இலாபம் ஈட்டக் கூடிய சீனத் திட்டமாகக் காணப்படுகிறது.

இதற்கப்பால், மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான அம்பாந்தோட்டையில் சீனாவினால் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் சிறிலங்கா மீது கடன் சுமையை ஏற்படுத்தியுள்ளன. மேற்குலக நாடுகளின் அழுத்தத்திலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்கும் திட்டம் தொடர்பான இந்தியாவின் சந்தேகம் காரணமாகவும், மகிந்த ராஜபக்ச, சீனாவின் உதவியை வரவேற்றார்.

இவர் சீனாவிடமிருந்து பெற்ற ‘உதவி’ மூலம் அம்பாந்தோட்டைத் துறைமுகம், மின்னாலை, விமான நிலையம், கைத்தொழில் பூங்கா, துடுப்பாட்ட அரங்கம், விளையாட்டு  மைதானம் போன்ற பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் பொருளாதார ரீதியாக எவ்வித நன்மையையும் பயக்கவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு சில கப்பல்களும் அம்பாந்தோட்டை விமான நிலையத்தில் ஒரு சில விமானப் பறப்புக்களுமே இடம்பெறுகின்றன. இதேபோன்று விளையாட்டு அரங்கம் பயன்படுத்தப்படாத நிலையிலுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட கைத்தொழில் பூங்கா தொடர்பாக உள்ளூரில் வாழும் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். சிறிலங்கா அரசாங்க வருமானத்தின் 90 சதவீதம் சேவைக் கடன்களுக்காகச் செலவிடப்படுகின்றன.

சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன்களை அடைக்க முடியாது சிறிலங்கா திணறிய போது, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் ஒருபகுதியானது சீனாவின் முழுமையான ஆளுகைக்கு கையளிக்கப்பட்டது.

இந்தியாவிடமிருந்து அதிருப்தி வெளியிடப்பட்டதையடுத்து, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் செயற்பாட்டுக் கட்டுப்பாடானது சிறிலங்காவிடம் தொடர்ந்தும் உள்ளதுடன் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் போன்றன அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சுதந்திரமாக நிறுத்தி வைக்கப்படமாட்டாது என சிறிலங்காவினால் உத்தரவாதமளிக்கப்பட்டது.

சீனாவின் அடுத்த மூலோபாய இலக்காக திருகோணமலைத் துறைமுகம் அமையாது என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. காலத்திற்கு உகந்த தீர்வை முன்னெடுத்தமைக்கு  பெற்றோலிய அமைச்சர் தர்மேந்திரா பிரதானிற்கு நன்றி.

பெற்றோலிய இறக்குமதி மற்றும் பெற்றோலியப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு திருகோணமலையைப் பயன்படுத்துவதற்கு இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் உடன்படிக்கையை எட்டியுள்ளது. திருகோணமலையில் இக்கூட்டுத்தாபனத்தால் நவீன பெற்றோலிய ஆலை ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

மியான்மாரில் மேற்கொள்ளப்படும் சீனாவின் அணை மற்றும் பாதைத் திட்டமானது பெங்கல் வளைகுடாவிலுள்ள கிகியூ துறைமுக விரிவாக்கத்தை நோக்காகக் கொண்டதாகும். அத்துடன் இதன் ஊடாக இதற்கு அயலிலுள்ள யுனான் மாகாணத்திற்கு பெற்றோலிய மற்றும் எரிவாயுக் குழாய்கள், வீதி, தொடருந்துப் பாதைகள் போன்றவற்றை ஒரு வலைப்பின்னலின் கீழ் இணைப்பதை சீனா நோக்காகக் கொண்டுள்ளது. ஆனால் சீனாவில் அதிகம் தங்கியிருப்பது தொடர்பாக மியான்மார் விழிப்புடன் உள்ளது.

ஏனெனில் சீனாவின் சக்தித் திட்டங்கள் மற்றும் மியான்மாரின் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கற்களை சீனா பயன்படுத்துவதில் ஆர்வமாக உள்ளமை போன்றன தனது நாட்டின் சூழலிற்குத் தீங்கை விளைவிக்கும் என்பது தொடர்பில் மியான்மார் விழிப்புடன் உள்ளது.

ஆனாலும் இந்தியா, யப்பான், தென்கொரியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அயலிலுள்ள ஆசியன் நாடுகள் போன்றன மியான்மாருடன் மிகப் பலமான பொருளாதார உறவுகளை மேற்கொள்ளாவிட்டால்   சீனாவை எதிர்ப்பதென்பது மியான்மாருக்கு கடினமானதாக இருக்கும். இதையொத்த அணுகுமுறையே நேபாளம் மற்றும் பங்களாதேசில் சீனா தனது திட்டங்களை மேற்கொள்ளும் போது அவ்விரு நாடுகளுக்கும் தேவையாக இருக்கும்.

சீனாவின் ‘அனைத்துக் காலநிலை நண்பனான’ பாகிஸ்தான், சீன-பாகிஸ்தான் பொருளாதார நடைபாதைத் திட்டத்தை அமுல்படுத்துவதிலும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது. உயர் மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றிருப்பினும் கூட, பாகிஸ்தானின் டயமர்-பாஷா அணைக்கட்டு போன்ற முக்கிய திட்டங்கள் இன்னமும் நிறைவுபெறாது முடக்க நிலையில் உள்ளன. சீனாவுடனான நிதி சார் உடன்படிக்கை எட்டப்படுவதில் பிரச்சினை ஏற்பட்டமையே இதற்கான காரணமாகும்.

பெசாவர் மற்றும் கராச்சி போன்ற இடங்களில் தொடருந்துத் திட்டங்களை அமுல்படுத்துவதிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் சீனக் கட்டுமானத் திட்டங்களில் உள்ளுர் மக்களின் பங்களிப்பு பெறப்படாமை போன்றவையே பாகிஸ்தானில், சீனத் திட்டங்கள் முழுமையடையாமைக்கான காரணங்களாகும்.

சீனாவானது வேறு நாடுகளில் மேற்கொள்ளும் தனது திட்டங்களுக்கு தனது நாட்டுத் தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்துவதுடன் இயந்திரங்களையும் பயன்படுத்துகின்றது. பாகிஸ்தானில் சீனாவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு உள்நாட்டு மக்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதால் இத்திட்டங்களுக்காகப் பெறப்பட்ட 50 பில்லியனுக்கும் அதிகமான கடன் தொகையை மீளவும் செலுத்துவதற்கு பாகிஸ்தானுக்கு எங்கிருந்து வளங்கள் கிடைக்கும் என வினாக்கள் எழுப்பப்படுகின்றன.

இதற்கும் மேலாக, குவடார் துறைமுகம் போன்ற தனது இறையாண்மை உள்ள இடங்களின் உரிமையை பாகிஸ்தான் விரைவில் இழக்க வேண்டிய நிலையேற்படலாம். மூலோபாய முக்கியத்துவம் மிக்க ஹெர்மூஸ் நீரிணைக்கு அருகில் சீனா தனது இராணுவத் தளங்களை அமைப்பதற்கு பாகிஸ்தானின் இறையாண்மை மிக்க இடங்கள் பயன்படுத்தப்படும் நிலை உருவாகும்.

ஆங்கிலத்தில் – G PARTHASARATHY
வழிமூலம்    – The hindu business line
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *